அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்தும் பாதுகாப்புச் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அதிபர் ஜோ பிடன் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்கா தனி நாடாக உருவெடுத்த 247வது ஆண்டு தினம் அந்நாட்டில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அரசு சார்பிலும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், வாஷிங்டனில் முப்படைகளின் ராணுவ அணிவகுப்பும் இடம்பெற்று இருந்தது. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். விழாவில் இந்திய அமெரிக்க பேண்டு வாத்தியக்குழுவினரும் கலந்து கொண்டு வாத்தியங்களை இசைத்தபடி பேரணியாகச் சென்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் நகரில் கண்கவர் வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதே போல் சிகாகோவிலும் ஆங்காங்கே மக்கள் பட்டாசுகளை வெடித்ததில் நகரமே வண்ண விளக்கு ஒளியில் ஜொலித்தது.
சுதந்திர தினக் கொண்டாடத்தின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் தேசிய கல்வியாளர் சங்கத்தினருடன் அதிபர் ஜோ பிடன் உரையாற்றினார். அப்போது, அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம் பற்றி கவலை தெரிவித்த அவர், இந்த வன்முறையால் கல்வியாளர்களே பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். அமெரிக்காவில் துப்பாக்கிச் சம்பவம் தினசரி நடைபெறுவது அந்நாட்டு தலைவர்களுக்கு பெரும் தலைவலி ஆக மாறி உள்ளது. அங்கு நடப்பாண்டில் மட்டும் இதுவரை 340த்திற்கும் மேற்பட்ட துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.