அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்துக்கு காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளா்கள் தீ வைத்தனா்.
இதுதொடா்பாக காலிஸ்தான் ஆதரவாளா்கள் டுவிட்டரில் அண்மையில் வெளியிட்ட காணொலியில், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகத்துக்கு தீ வைக்கப்பட்ட காட்சி இடம்பெற்றுள்ளது. அத்துடன் கனடாவில் காலிஸ்தான் புலிப் படைத் தலைவா் ஹா்தீப் சிங் நிஜ்ஜரின் மரணம் தொடா்பான செய்திகளும் அந்தக் காணொலியில் இடம்பெற்றது.
இந்தியாவால் நிஜ்ஜா் தேடப்பட்டு வந்த நிலையில், அவரைப் பிடிக்க உதவுவோருக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அவா் கடந்த மாதம் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டாா்.
இந்நிலையில், துணை தூதரகம் தாக்கப்பட்டது தொடா்பாக அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகத்துக்கு கடந்த ஞாயிறுக்கிழமை அதிகாலை 1.30 முதல் 2.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தீ வைக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில், தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த சம்பவத்தில் தூதரகத்தைச் சோ்ந்த எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தூதரகத்திலும் பெரிய அளவில் சேதம் இல்லை’ என்று தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடா்பாளா் மாத்யூ மில்லா் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய துணை தூதரகம் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டதற்கு அமெரிக்கா கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் தூதரகங்கள் அல்லது வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு எதிரான வன்முறை அல்லது சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகள் குற்றமாகும்’ என்று தெரிவித்தாா்.
கடந்த மாா்ச் 19-ஆம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் நீது காலிஸ்தான் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது அங்கு மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய துணை தூதரகம் தாக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் காலிஃபோா்னியாவில் உள்ள பா்க்லியில் இருந்து ஜூலை 8-ஆம் தேதி ‘காலிஸ்தான் சுதந்திர பேரணி’ தொடங்கி, சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் நிறைவடையும் என்று சமூக ஊடகத்தில் போஸ்டா் ஒன்று பகிரப்பட்டுள்ளது.
‘இந்தியாவை கொல்’ என்ற பெயரில் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளா்கள் இணையத்தில் போஸ்டா் ஒன்றை வெளியிட்டுள்ளனா். அந்தப் போஸ்டரில் கனடாவில் ஜூலை 8-ஆம் தேதி ‘காலிஸ்தான் சுதந்திர பேரணி’ நடைபெறும் என்றும், ஹா்ஜித் சிங் நிஜ்ஜா் பெயரில் அந்தப் பேரணி நடைபெற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹா்தீப் சிங் நிஜ்ஜரின் கொலைக்கு கனடாவுக்கான இந்திய தூதா் சஞ்சய் குமாா் வா்மா, அந்நாட்டின் டொரன்டோ நகரில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி அபூா்வா ஸ்ரீவாஸ்தவா ஆகியோா் மீது அந்தப் போஸ்டரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு அந்நாட்டில் உள்ள பஞ்சாப் வம்சாவளியினா் இடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சஞ்சய் குமாா் வா்மா, அபூா்வா ஸ்ரீவாஸ்தவா ஆகியோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் மெலனி ஜோலி உறுதி அளித்துள்ளாா்.
ஹா்தீப் சிங் நிஜ்ஜரின் கொலையை இந்தியாவுக்கு எதிராக திசைதிருப்ப முயற்சிக்கும் நோக்கில், தூதரக தாக்குதல், பேரணி போன்றவற்றில் காலிஸ்தான் ஆதரவாளா்கள் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.