நீதியும் தர்மமும் வெல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டான தீர்ப்பு: ஈவிகேஎஸ் இளங்கோவன்

தேனி தொகுதி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதற்கு அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக -பாஜக படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி, தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தேனி தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தேனி தொகுதியில் அதிமுக சார்பில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ரவீந்திரநாத்துக்காக தேனியில் பிரதமர் மோடியே வந்து பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் வரலாற்றில் தேனி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் யாரும் வந்ததே இல்லை. தேனியில் அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரஸின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துவிட்ட பேசிய ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ரவீந்திரநாத் குமார் எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ பதவியேற்க தடை விதிக்க கோரி ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார். ஆனால் ரவீந்திரநாத் பெற்ற வெற்றியை எதிர்த்து மிலானி என்ற வாக்காளர் மனு தாக்கல் செய்தார். கடந்த 3 ஆண்டு காலமாக நடைபெற்ற வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பற்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டவரை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். என்னைப் பொருத்தவரைக்கும் அந்த தோல்வியில் இருந்து மீண்டு வரவே எனக்கு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. திமுக காங்கிரஸ் கூட்டணி எல்லா இடங்களில் ஜெயித்து விட்டு தேனியில் மட்டும் தோல்வியடைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அங்கே நிறைய முறைகேடுகள் நடந்தன. மின்னணு வாக்குப்பெட்டிகள் மாற்றப்பட்டன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என்று சொன்னால் எல்லோரும் கேலி செய்வார்களே என்று நான் அமைதியாக இருந்து விட்டேன். தோல்வியில் இருந்து மீண்டு வர எனக்கு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. கால தாமதம் ஆனாலும் நீதியும் தர்மமும் வெல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த தீர்ப்பு.

தேனி தேர்தலில் முழுக்க முழுக்க சட்ட விரோத காரியங்கள் நடைபெற துணையாக இருந்தவர் கலெக்டர்தான். அவர்தான் அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வத்தின் எடுபிடியாக வேலை செய்தார். அவர்தான் தேர்தல் அதிகாரியாகவும் இருந்தார். தேர்தல் விதிமீறல் பணப்பட்டுவாடா குறித்து பலமுறை நாங்கள் முறையிட்டும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. புகார்களை அலட்சியம் செய்தார். எங்களுக்கு நிறைய கெடுதல்களை செய்தார். இது அவர்களுக்கு எல்லாம் ஒரு சவுக்கடியாக இருக்கும் என்றும் கூறினார்.

எல்லோரும் வெற்றி பெறும் போது நாம் மட்டும் தோல்வியடைந்தது ஏன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எனது தோல்விக்காக நான் என்ன காரணம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மற்றவர்கள் இருக்க மாட்டார்கள். அதனால்தான் நான் வழக்கு தொடரவில்லை. வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு வாக்காளர் நினைத்தால் நீதி நேர்மையான முறையில் வழக்கு தொடர்ந்தால் வெற்றி பெறலாம் என்பதை இது நிரூபித்துள்ளது. என்னைப்பொருத்தவரை நீதியும் தர்மமும் சாகவில்லை என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.