அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுவிட்டது. தி.மு.க.வின் இந்த 2 ஆண்டு கால ஆட்சி தமிழகத்துக்கு இருண்ட கால ஆட்சிஎன்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
திருச்சி துவாக்குடியில் உள்ள பாய்லர் ஆலை நிறுவன வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து அவர் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு வந்தார். அங்கு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்கு முயற்சி மேற்கொண்டதற்காக அவருக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் எழுச்சி மாநாடு மதுரையில் நடக்கிறது. அதற்காக வெளியிட்ட இலச்சினையில் ஜல்லிக்கட்டு வீரர் காளையை அடக்குவது போன்ற படம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு வீரரையும் கவுரவப்படுத்துகிறோம். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போரையும் பாராட்டுகிறோம். அ.தி.மு.க.வை பொறுத்தவரை பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்ந்து நடைபெற துணை நிற்போம்.
திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். இந்த திட்டத்துக்காக ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு முதற்கட்ட பணியை நான் தொடங்கி வைத்தேன். தற்போது அந்த பணியையும் கிடப்பில் போட்டு விட்டதாக விவசாயிகள் கூறுகிறார்கள். நிச்சயம் அனைவரது ஒத்துழைப்போடு, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் அமையும். அப்போது, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணியை தொடங்கி வைப்போம். அது மட்டுமல்லாமல் அ.தி.மு.க. அரசே அந்த திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றி பசுமை புரட்சியை ஏற்படுத்துவோம்.
பருவகாலங்களில் பெய்கிற மழைநீர் வீணாகாமல் தேக்குவதற்காக ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டன. குடிமராமத்து திட்டத்தை நிறைவேற்றி வண்டல் மண்ணை விவசாயிகளிடமே கொடுத்தோம். இவையெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு கொண்டு வந்த அற்புதமான திட்டம். தற்போது இன்றைய ஆட்சியாளர்கள் அந்த திட்டத்தையும் கிடப்பில் போட்டுவிட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு வீரவாள், கேடயம் உள்ளிட்ட பல்வேறு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. எம்.ஜி.ஆர். சிலை திறப்பு பின்னர் மாலை துவாக்குடியில் பாய்லர் ஆலை நுழைவு பகுதியில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் 7 அடி உயரமுள்ள முழுஉருவ வெண்கல சிலை திறப்புவிழாவில் கலந்து கொண்டு சிலையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
எடப்பாடி பழனிசாமி, சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவா் பேசியதாவது:-
கருணாநிதி தம் மக்களுக்காக (குடும்பத்துக்காக) உழைத்தவர். ஜெயலலிதா தனக்கு பிறகு ஒரு தொண்டன் கட்சிக்கு தலைவராக வரவேண்டும் என்று நினைத்தார். அ.தி.மு.க.வில் விசுவாசமாக இருந்தால் எதாவது ஒரு பதவி நிச்சயம் கிடைக்கும். ஆனால் தி.மு.க.வில் பணம் இருந்தால் தான் பதவி கிடைக்கும். அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட முதல்-அமைச்சர் ஆகலாம். கட்சிக்கு பொதுச்செயலாளர் ஆகலாம். தி.மு.க.வில் ஒரு சாதாரண தொண்டன் கட்சியின் தலைமை பதவிக்கு வரமுடியாது. எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை அசைத்து பார்க்க முடியாது.
மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயன்றும் அ.தி.மு.க.வை அசைக்க முடியவில்லை. இதனால் தான் அவர் பி டீமை (ஓ.பன்னீர்செல்வம் அணி) உருவாக்கி உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் இங்கு மாநாடு நடத்தினார். ஆனால் நாம் எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்படும் என்று அறிவித்ததற்கே இங்கு மாநாடு போல் தொண்டர்களான நீங்கள் திரண்டு உள்ளீர்கள். தமிழகத்தில் 31 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான். இன்று எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து மத்தியில் ஆட்சி அமைக்கப்போவதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். தமிழகத்தையே உங்களால் பாதுகாக்க முடியவில்லை. உங்கள் கட்சியினரையே பாதுகாக்க முடியவில்லை. வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் எப்போது ரெய்டு வரும் என்ற பயத்தில் பல அமைச்சர்களுக்கு தூக்கம் போய்விட்டது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதும், ஏதாவது வாய்திறந்து விடுவாரோ என்று பயந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் அவரது குடும்பத்தினர் வரை அவரை சென்று பார்த்து வருகிறார்கள். தி.மு.க.வின் இந்த 2 ஆண்டு கால ஆட்சி தமிழகத்துக்கு இருண்ட கால ஆட்சி. 2 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு துன்பமும், வேதனையும் தான் கிடைத்துள்ளதே தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை. இந்த 2 ஆண்டு காலத்தில் மு.க.ஸ்டாலின் குடும்பம் கொள்ளை அடித்தது தான் மிச்சம். அவர்களது குடும்பத்தினர் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து இருப்பதாக நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் ஆடியோ மூலம் கூறுகிறார். செந்தில்பாலாஜி வாய் திறந்தால் இந்த ஆட்சி கோவிந்தா தான். இந்த ஆட்சியை காப்பாற்றவே அவர்கள் செந்தில்பாலாஜியை காப்பாற்ற துடிக்கிறார்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். ஆனால் ஒரு சில அறிவிப்புகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு அனைத்தையும் நிறைவேற்றியதாக கூறுகிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் மின்கட்டண உயர்வு, வீட்டுவரி உயர்வு என்று அனைத்தையும் உயர்த்தி விட்டார்கள். விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. மு.க.ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
