டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தொழிலதிபர் தினேஷ் அரோரா கைது!

டெல்லியை உலுக்கி வரும் மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ சாட்சியாக அறிவிக்கப்பட்ட தொழில் அதிபர் தினேஷ் அரோரா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைநகர் டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையில் இடம் பெற்றிருந்த வரிக்குறைப்பு உள்ளிட்ட முக்கிய சலுகைகள் குறித்த விவரங்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு ஆதாயமாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அப்போது டெல்லி முன்னாள் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 31 இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக சிசோடியா உட்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேதி மணிஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் டெல்லி தலைமை செயலகத்தில் மணிஷ் சிசோடியா அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். இதை ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் இருக்கும் மணிஷ் சிசோடியாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக மணிஷ் சிசோடியாவுக்கு நெருக்கமான தொழில் அதிபர் தினேஷ் அரோராவை நேற்று அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. பண மோசடி வழக்கில் தினேஷ் அரோரா கைதாகியிருக்கிறார். இதே வழக்கை விசாரிக்கும் சிபிஐ, தினேஷ் அரோரா அப்ரூவராக மாறியதாக அறிவித்து இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி சிபிஐ, கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் அவருக்கு மனிப்பும் வழங்கியிருந்த நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படும் 13-வது நபர் தினேஷ் அரோரா ஆவார்.