மேகதாது அணை கட்ட ஒப்புதல் பெற துரித நடவடிக்கை: சித்தராமையா

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக புதிய அறிவிப்பை கர்நாடக பட்ஜெட்டின் போது அம்மாநில முதலமைச்சரும், நிதியமைச்சருமான சித்தராமையா வெளியிட்டுள்ளார்.மேகதாது அணை திட்டம் மற்றும் குடிநீர் திட்டம் அனுமதிக்கு தேவையான ஆவணங்கள் ஏற்கெனவே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான அனுமதி பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சித்தராமையாவிற்கு இது 14-வது பட்ஜெட் தாக்கல் ஆகும். 2023-24 நிதியாண்டில் இது இரண்டாவது பட்ஜெட். கடந்த பாஜக ஆட்சியில் தேர்தலுக்கு முன்பாக பாதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீதி பட்ஜெட்டை காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார்.

மேகதாது அணைத்திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்த்த நிலையில், மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மை பணி என்றும் கூறியுள்ளார். மேலும் மேகதாது அணைக்கு நிலம்கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

அண்மையில் டெல்லி சென்ற தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்து பேசினார். அப்போது ஜூன் மாதம் வழங்க வேண்டிய தண்ணீர் கர்நாடக தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தார். மேலும் மேகதாது அணை கட்டும் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த அவர், தமிழ்நாடு மேகதாது அணை கட்டும் திட்டத்தை தொடர்ந்து எதிர்க்கும் என தெரிவித்திருந்தார்.