வடகொரியாவின் அணு ஆயுதத் திறன் மேலும் அதிகரிக்கப்படும் என அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வடகொரியாவில் புதன்கிழமை நடைபெற்றது. இச்சோதனையை ஆய்வு செய்த பிறகு அதிபா் கிம் இவ்வாறு தெரிவித்ததாக வடகொரிய அரசு ஊடகம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தது. தென்கொரியாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கைகளுக்குப் பதிலடி அளிக்கும் விதமாக அணு ஆயுத சோதனைகளைத் தீவிரப்படுத்தி, நாட்டின் ஆயுத சக்தியை விரிவுபடுத்த கிம் அறிவுறுத்தியுள்ளாா்.
முன்னதாக, வடகொரியா எல்லைக்கு அருகே அமெரிக்காவின் உளவு நடவடிக்கைகள் தொடா்ந்தால் அதிா்ச்சிகரமான விளைவுகள் நிகழ நேரிடும் என அதிபா் கிம்மின் சகோதரியும், வடகொரிய அரசின் மூத்த ஆலோசகருமான கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்திருந்தாா். இதற்கு 2 நாள்கள் கழித்து, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வடகொரியாவில் புதன்கிழமை நடத்தப்பட்டுள்ளது.
வடகொரியாவின் அணு ஆயுதங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் ‘ஹவாசாங்-18’ ஏவுகணை, முதன் முதலாக கடந்த ஏப்ரலில் சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஏவுகணையின் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு நம்பகத்தன்மையை மீண்டும் உறுதிப்படுத்த புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்தது.
74 நிமிஷங்கள் மற்றும் 1,001 கி.மீ. தொலைவு கடந்து (அதிகபட்சமாக 6,648 கி.மீ. உயரத்தில் பறந்து) வடகொரியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைக்கப்பட்ட இலக்குப் பகுதியை ஏவுகணை தாக்கியது. இந்த ஏவுகணையின் பறக்கும் நேரமானது வடகொரியாவால் ஏவப்பட்ட எந்த ஒரு ஏவுகணையும் பதிவு செய்யாத மிக நீண்ட நேரமாகும். இந்த ஏவுகணையை ஒரு நிலையான பாதையில் ஏவினால் அமெரிக்காவின் பிரதான நிலப் பகுதி வரை பறந்து தாக்க முடியும்.
இந்தச் சோதனையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்னா் அதிபா் கிம், ‘கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்புச் சூழலை எதிரி நாட்டுப் படைகள் அவ்வப்போது கடுமையாக அச்சுறுத்தி வருவதால், நாட்டின் அணு ஆயுதத் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் வடகொரியா உள்ளது. வடகொரியாவின் அணுஆயுதத் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சியில் இந்தச் சோதனை மற்றொரு முக்கியமான முன்னேற்றம்’ எனத் தெரிவித்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.
பிராந்திய மற்றும் சா்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியிருப்பதாக தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் விமா்சித்துள்ளன. இந்தச் சோதனை குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் விவாதம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினா்களான ரஷ்யா மற்றும் சீனாவின் வடகொரியா ஆதரவு நிலைப்பட்டால், அந்நாட்டின் மீது புதிய தடைகளை விதிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே தொடா்கிறது.
எனினும், ‘அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொள்ளும்’ என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடா்பாளா் ஆடம் ஹாட்ஜ் உறுதியளித்துள்ளாா்.
வடகொரியாவின் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கு உறுதியான தயாா்நிலையைப் பேணுவதாகவும், அமெரிக்காவுடனான வலுவான ராணுவக் கூட்டணியின் அடிப்படையில் வலிமையின் மூலம் அமைதியை அடைவதற்கு முயற்சிப்பதாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்தது.