கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
500 நாட்களை கடந்து நடைபெறும் ரஷ்ய- உக்ரைன் போரில் இருதரப்பும் மாறிமாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷ்யாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம் எனும் அந்த உடன்படிக்கையின்படி உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷ்யா சம்மதித்தது. அந்த தானிய ஏற்றுமதி கப்பல்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தாமல் இருக்கவும் ரஷ்யா சம்மத்தது. இந்த ஒப்பந்தம் இரு தினங்களுக்கு முன் காலாவதியான நிலையில் இதனை மீண்டும் புதுப்பிக்க ரஷ்யா மறுத்து, இதிலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் நேற்றிரவு துறைமுக நகரமான உக்ரைனின் தெற்கு ஒடேசா பகுதியில் ரஷ்யா தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. தொடர்ந்து 2-வது நாளாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கருங்கடல் ஒப்பந்தம் காலாவதியான பின் இப்பகுதியில் ரஷ்யா நடத்தும் மிகப்பெரிய இரண்டாவது தாக்குதல் இது என இன்று காலை தெரிவித்த அப்பகுதி ஆளுநர் ஓலெக் கிளிப்பர், மக்களை தங்கள் வசிப்பிடங்களிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டார். இத்தாக்குதலின் விளைவுகளை காட்டும் வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் ஒரு தெருவில் பல ஜன்னல்கள் உடைக்கப்பட்டு ஏராளமான கண்ணாடித் துகள்கள் சிதறிக்கிடக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தெரிகிறது. ராணுவ தாக்குதல்களின்போது ஒலிக்கப்படும் எச்சரிக்கை சைரன்கள், உக்ரைன் முழுவதும் 10-ற்கும் மேற்பட்ட இடங்களில் ஒலிக்கப்பட்டிருக்கிறது.
நேற்றைய முன்தினம் நடைபெற்ற ரஷிய தாக்குதலில், உக்ரைனின் துறைமுக நகரமான ஒடேசாவில் உள்ள கட்டிடங்கள் சேதமானது. அதற்கு பின் ரஷ்யா வெளியிட்ட ஒரு அறிக்கையில், கருங்கடல் வழியாக நடைபெறும் தானிய ஏற்றுமதியின் எதிர்காலம் குறித்து ஒரு மறைமுக எச்சரிக்கையை வெளியிட்டதுடன் ஒடேசா துறைமுகத்தை உக்ரைன் “போர் நோக்கங்களுக்காக” பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குரூஸ் வகையை சேர்ந்த 6 ஏவுகணைகளை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதல்களில் துறைமுகத்தின் சில கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள உக்ரைன் ராணுவம், ரஷ்யாவின் ஒப்பந்த மீறலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.