எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய ராக்கெட் வளிமண்டலத்தில் உள்ள அயனோஸ்பியரில் துளையை ஏற்படுத்திவிட்டதாக விஞ்ஞானி ஒருவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
பால்கன் 9 எனும் ராக்கெட் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடியது அல்ல. அதை திரும்ப திரும்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் இரு நிலைகள் உள்ளன. எனவே இந்த ராக்கெட் பயணம் பாதுகாப்பானது. இதுவரை இந்த ராக்கெட் 240 செயற்கைகோள்களை ஏவியுள்ளது. 198 கருவிகளை கொண்டு சென்று பல்வேறு நிலைகளில் தரையிறங்கியுள்ளது. உலகின் முதல் ரீயூசபிள் ராக்கெட் பால்கன் 9 என ஸ்பேஸ் எக்ஸ் கூறி வருகிறது.
கலிபோர்னியாவில் வாண்டன்பெர்க் ஸ்பேஸ் ஃபோர்ஸ் பேஸில் இருந்து கடந்த 19 ஆம் தேதி பால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டது. அவ்வாறு அந்த ராக்கெட் ஏவப்பட்ட காணொலியை ஆய்வு செய்த போது நிலத்திலிருந்து 286 கிலோமீட்டர் தொலைவில் வளிமண்டலத்தில் இளஞ்சிவப்பு நிற ஒளி தோன்றியுள்ளதாம். அது அயனோஸ்பியரில் தற்காலிக துளை ஏற்பட்டதை குறிக்கிறதாம். இந்த தகவலை பேராசிரியர் பௌம்கார்டனர் தெரிவித்துள்ளார். எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் இது போன்ற சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது இது முதல்முறை அல்ல. கடந்த 2017 ஆம் ஆண்டு பார்மோசாட் 5 என்ற செயற்கைகோளை கொண்டு சென்ற பால்கன் 9, எடை குறைவு காரணமாக அந்த ராக்கெட் பூமியின் மேற்பரப்பிற்கு இணையாக பயணிக்காமல் செங்குத்து பாதையில் பயணித்தது. இதனால் அதிர்வலைகள் உருவாக்கின. இதன் மூலம் அயனோஸ்பியரில் ஒரு துளை ஏற்பட்டது. இதே போல் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்தது.
சூரியனிடம் இருந்து பெறப்படும் புறஊதாக் கதிர்களின் ஆற்றலால் அயனோஸ்பியரில் உள்ள காற்றின் மூலக்கூறுகள் அயனியாக்கப்பட்டுள்ளன. இந்த அயனிகள் வானொலி அலைகளை எதிரொலிக்கும் தன்மை கொண்டது என ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனி தெரிவித்துள்ளார். இந்த அயனோஸ்பியர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் தகவல் தொடர்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ரேடியோ அலைகளை பயன்படுத்துகிறார்கள். பூமிக்கு இந்த அயனோஸ்பியர் நன்மை செய்கிறது என்னவென்றால் சூரியனிடம் இருந்து வரும் எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள், அல்ட்ரா வயலெட் கதிர்கள் ஆகிய கெடுதல் விளைவிக்கும் கதிர்கள் இந்த அயனோஸ்பியர்தான் உறிஞ்சி கொண்டு பூமிக்கு அனுப்பாமல் மனிதர்களை காக்கிறது. இது போன்ற கதிர்கள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை.