கிரீஸ் காட்டுத்தீயை அணைத்தபோது விமானம் விபத்து: 2 விமானிகள் பலி!

கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைப்பதற்காக சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.

கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றம் எதிரொலியாக வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், காட்டுத்தீ பரவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில், நடப்பு ஆண்டில் பெரிய அளவில் காட்டுத்தீ பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுலாவாசிகள் அதிகம் விரும்ப கூடிய ரோட்ஸ் தீவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கடந்த வாரம் செவ்வாய் கிழமை பெரிய அளவில் காட்டுத்தீ பரவியது. இதனைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காக முன்பே தப்பி வெளியேறினர்.

இந்நிலையில், அந்நாட்டிற்கு உட்பட்ட கோர்பு தீவில் திடீரென பல இடங்களில் காட்டுத்தீ பரவியது. இதனால், தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் போராடி வருகின்றனர். இதில் 2,500 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, எவியா தீவிலும் காட்டுத்தீ மளமளவென பரவியது. இந்த நிலையில், எவியா தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைப்பதற்காக அந்நாட்டு விமான படையை சேர்ந்த நீர் தெளிக்கும் விமானம் ஒன்று சென்றது. கனடைர் சி.எல்.-215 என்ற எண் கொண்ட அந்த விமானம் பிளாடனிஸ்டோஸ் என்ற பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது, அது திடீரென விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தின் கேப்டன் (வயது 34), துணை விமானி (வயது 27) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். ஆயுத படையை சேர்ந்தவர்கள் பணியின்போது உயிரிழந்த நிலையில், 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது. காட்டுத்தீயை முன்னிட்டு 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையே இந்த காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுப்பதற்காக சுமார் 100 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 500 வீரர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள உறுப்பு நாடுகள் அங்கு அனுப்பி உள்ளன. இதேபோல் இத்தாலியிலும் அதிக வெப்ப அலை காரணமாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதால் புகைமண்டலம் போல காட்சி அளிக்கிறது. எனவே அங்குள்ள பலேர்மோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் விமான பயணங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர். இதற்கிடையே வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.