சீனாவிலிருந்து வரக்கூடிய தாக்குதல்களை எதிர்கொள்ளவும், தற்காப்பு திறனை மேம்படுத்தி கொள்ளவும், தைவானுக்கு அமெரிக்கா சுமார் ரூ.2800 கோடி ($345 மில்லியன்) மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க போகிறது. அமெரிக்க அதிபரின் டிராடவுன் அதாரிட்டி எனும் உத்தரவின் மூலம் அமெரிக்கா இதனை வழங்குகிறது
கிழக்காசிய ஜனநாயக நாடான தைவானை, சீனா தனது தேசத்தின் ஒரு பகுதியாக அறிவித்தது. ஆனால், தைவான் இதனை ஏற்க மறுத்து வருகிறது. தேவைப்பட்டால் ராணுவ ஆக்ரமிப்பு மூலம் தைவானை கைப்பற்ற போவதாகவும் சீனா கூறி வருகிறது. கடந்த ஆண்டு, சீன இராணுவம் தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் 2 பெரிய ராணுவ பயிற்சிகளை நடத்தியது. இந்த பயிற்சிகளில் தைவான் தீவின் முற்றுகையும் நடைபெற்றது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே பதட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில் சீனாவிலிருந்து வரக்கூடிய தாக்குதல்களை எதிர்கொள்ளவும், தற்காப்பு திறனை மேம்படுத்தி கொள்ளவும், தைவானுக்கு அமெரிக்கா சுமார் ரூ.2800 கோடி ($345 மில்லியன்) மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க போகிறது. இந்த தொகுப்பில், உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு கருவிகளும், சிறிய ஆயுத வெடிமருந்துகளும் அடங்கும். “இதன் மூலம் தற்காலத்திலும், எதிர்காலத்திலும் தன் நாட்டிற்கெதிரான ராணுவ நடவடிக்கைகளை தைவான் தடுக்க முடியும்”, என அமெரிக்க ராணுவ அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கெதிராக போரிடும் உக்ரைனுக்கு வழங்கியது போலவே, அவசரகால உதவியாக ராணுவ தளவாடங்களை உடனடியாக ராணுவ அமைச்சகம் மூலம் வழங்கும் அமெரிக்க அதிபரின் டிராடவுன் அதாரிட்டி (drawdown authority) எனும் உத்தரவின் மூலம் அமெரிக்கா இதனை வழங்குகிறது. மேலும் இந்த தளவாடங்கள், அமெரிக்காவின் சொந்த இருப்புகளிலிருந்து வழங்கப்படுகின்றன. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, “தைவான் ஜலசந்தியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் தற்போதைய நிலையை நிலைநிறுத்துவதற்காக, அமெரிக்காவுடன் பாதுகாப்பு விஷயங்களில் தைவான் நெருக்கமாக ஒத்துழைக்கும்” என தைவான் அறிவித்துள்ளது.