பாகிஸ்தானின் ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை ஹஸாரா எக்ஸ்பிரஸ் ரயில், ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் உள்ள நவாப்ஷா பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. நவாப்ஷாவுக்கும் ஷாஹ்தாபூருக்கும் இடையே சஹாரா ரயில் நிலையத்திலிருந்து புறப்புட்டுச் சென்றபிறகு இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். தடம்புரண்ட பத்து பெட்டிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.