டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்று அமித் ஷா தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே அவை முடங்கி வந்தது.. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துவதால் அவை முடங்கி வந்தது. இதற்கிடையே அமளிக்கு நடுவே மத்திய அரசு சில மசோதாக்களையும் மத்திய அரசு கொண்டு வருகிறது. அதன்படி மத்திய அரசு டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதாவை கொண்டு வந்ததது. டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி அரசு இருக்கிறது. அங்கே ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகத் தீர்ப்பை வழங்கியது. இதற்கிடையே இதில் ஆம் ஆத்மி அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லோக்சபாவில் இந்த மசோதா தாக்கலானது.
இதற்கிடையே இது தொடர்பான விவாதம் நேற்று ராஜ்யசபாவில் நடைபெற்றது. அப்போது பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, “உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு உடனடியாக டெல்லியில் ஆம் ஆத்மி அரசு விஜிலென்ஸ் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்தது. அவர்கள் தான் முதல்வரின் வீடு புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்து வந்தனர். இதன் காரணமாகவே விஜிலென்ஸ் துறை அதிகாரிகளை ஆம் ஆத்மி அரசு உடனடியாக இடமாற்றம் செய்தது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஆம் ஆத்மியை திருப்திப்படுத்தவே இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. தலைநகர் டெல்லியில் சேவைகள் உட்பட அனைத்து விஷயங்களிலும் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை மத்திய அரசுக்குக் கொடுக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்தியதே காங்கிரஸ் அரசு தான்.. இப்போது அவர்கள் ஆம் ஆத்மி கட்சியைத் திருப்திப்படுத்த டெல்லி சேவை மசோதாவை எதிர்க்கிறார்கள். இந்த மசோதா எந்தவொரு எமெர்ஜென்சியையும் விதிக்காது.. இது டெல்லி மக்களின் உரிமைகளையும் பறிக்காது. இந்த மசோதாவின் நோக்கம் அது இல்லை. சிலர் டெல்லியில் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளவே மத்திய அரசு இதைக் கொண்டு வருவதாகக் கூறுகின்றனர். இந்திய மக்கள் எங்களுக்கு அதிகாரத்தையும் உரிமையையும் வழங்கியுள்ளனர். எனவே, மத்திய அரசு எந்த மாநிலத்திடமிருந்தும் அதிகாரத்தைப் பிடுங்கத் தேவையில்லை. நாங்கள் 130 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார். மேலும், டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்றும் அவர் கூறினார்.
