டெல்லி மசோதா மீது வீல் சேரில் வந்து வாக்களித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

தலைநகர் டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இதில் வாக்களிக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீல்சேரில் வந்த படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நாட்டின் தலைநகர் டெல்லி மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் ஒரு யூனியன் பிரதேசமாக இருக்கிறது. எனவே, அங்குள்ள அரசை காட்டிலும் மத்திய அரசுக்கு அங்குக் கூடுதல் அதிகாரம் இருக்கிறது. அங்கு ஆம் ஆத்மி ஆளும் கட்சியாக இருந்த போதிலும், போலீஸ் உள்ளிட்ட சில குறிப்பிட்ட துறைகள் மத்திய உள் துறை அமைச்சகம் வசமே இருந்து வருகிறது. இதற்கிடையே அடுத்த கட்டமாக டெல்லி குடிமைப் பணி அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இதில் கெஜ்ரிவால் அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை ஆம் ஆத்மி சென்றது. அதில் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

இதற்கிடையே டெல்லி அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசு புதியதொரு மசோதாவை கொண்டு வந்தது. இதன் மூலம் அதிகாரிகள் நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அதிகாரம் கிடைக்கும். இருப்பினும், இதற்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் நாடு முழுக்க இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். லோக்சபாவில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இருப்பதால் இது ஈஸியாக நிறைவேறும் எனத் தெரியும். அதேநேரம் ராஜ்யசபாவில் இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அவர் கடுமையாக முயற்சிகளை எடுத்தார். குறிப்பாக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தொடக்கத்தில் அமைதியாகவே இருந்தது. பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடந்த நிலையில், அப்போது வரை காங்கிரஸ் அமைதியாகவே இருந்தது. இதனிடையே காங்கிரஸ் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை என்றால் எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் நடக்கும் அடுத்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என அதிரடியாக அறிவித்தார் கெஜ்ரிவால். அதன் பின்னர் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை அறிவித்தது. இந்த மசோதாவை எதிர்ப்பில் மிகவும் உறுதியா இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த மசோதா கடந்த வாரம் லோக்சபாவில் நிறைவேறிய நிலையில், நேற்று அது ராஜ்யசபாவில் கொண்டு வரப்பட்டது. இதில் மத்திய அரசுக்கு ஆதரவாக 131 வாக்குகள் பதிவானது. அதேபோல மத்திய அரசுக்கு எதிராக 102 வாக்குகள் பதிவானது. இதன் மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

இதற்கிடையே இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீல் சேரில் வந்த படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 90 வயதாகும் மன்மோகன் சிங் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பிரச்சினைகளால் பெரியளவில் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை. இருப்பினும், நேற்றைய தினம் மத்திய அரசின் இந்த மசோதாவில் வாக்களிக்க அவர் உடல்நிலை பிரச்சினைகளைத் தாண்டி நாடாளுமன்றத்திற்கு வந்தார். இது தொடர்பான படம் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.