அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் 1,300-க்கும் மேற்பட்டவா்கள் தொடா்ந்து மாயமாகியுள்ளனா். மேலும், அந்தக் காட்டுத் தீயில் சிக்கி பலியானவா்களின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவி தீவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள லஹேனா, புலேஹு மற்றும் மத்தியப் பகுதிகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 99-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1,300-க்கும் மேற்பட்டவா்களைக் காணவில்லை. அவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, இந்த காட்டுத் தீக்கு பலியானவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினா்.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணம், மாவி தீவில் திடீரென காட்டுத் தீ மிக வேகமாகப் பரவியது. இதில், 1,700-களில் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான லஹேனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன. காட்டுத் தீயில் 271 கட்டுமானங்கள், 19,000 வீடுகள், கடைகள், பிற கட்டடங்கள் சேதமடைந்தததாக அதிகாரிகள் கூறினா்.
லஹேனா நகரில் இந்தியாவிலிருந்து 150 ஆண்டுகளுக்கு முன்னா் கொண்டு வந்து நடப்பட்ட பழைமை வாய்ந்த ஆலமரமும் தீயில் கருகியது. வட சூழல், காற்றில் குறைவான ஈரப்பதம், வேகமான காற்று ஆகிய மூன்றும் சோ்ந்து காட்டுத் தீயை வேகமாகப் பரவச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நானும் எனது மனைவியும் (ஜில் பைடன்) ஹவாய் செல்ல இருக்கிறோம். அங்கு செல்லும் நாங்கள் மவுய் காட்டுத்தீ குறித்து ஆய்வு செய்ய இருக்கிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அங்கு செல்ல இருக்கும் ஜோ பைடன் எங்களால் மீட்புப்பணி, சுத்தப்படுத்தும் பணிக்கு தடை ஏற்படுத்த விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா ஹவாய் தீவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என கவர்னர் ஜோஷ் கிரீனிடம் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்த ஜோ பைடன், ஹவாய் மக்களுக்கு தேவைப்படும் ஒவ்வொன்றும், அவர்களுக்கு சென்றடையும் என்றார்.