பொது இடங்களில் பெண்கள் முகத்தை ஆண்கள் பார்த்தால் பெண்கள் அவர்களது மதிப்பை இழப்பதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள கல்வியாளர்கள் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது ஹிஜாப் அணிய வேண்டும் என்பதை ஒப்புக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் தங்களது அரசை மீண்டும் அமைத்தனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும், கல்வி நிலையங்களில் உயர்கல்வி பெறத் தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனை எதிர்த்து ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், பொது இடங்களில் பெண்கள் முகத்தை ஆண்கள் பார்த்தால் பெண்கள் அவர்களது மதிப்பை இழப்பதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பெண்களின் முகம் பொது வெளியில் தென்பட்டால் அவர்கள் பாவத்தின் பிடியில் விழுவார்கள். பெரிய நகரங்களில் பெண்கள் ஹிஜாப் அணியாமல் இருப்பதை பார்ப்பதற்கு வருத்தமாக உள்ளது. ஆப்கானிஸ்தானின் கல்வியாளர்கள் பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். பெண்கள் முகத்துக்கு ஒரு மதிப்பு உள்ளது. ஆண்கள் பெண்களின் முகத்தைப் பார்க்கும்போது அவர்கள் அவர்களது மதிப்பை இழக்கிறார்கள் என்றார்.