தைவான் அருகே சீனா மீண்டும் போா் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது!

தைவான் துணை அதிபா் வில்லியம் லாயின் அமெரிக்கப் பயணத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்தத் தீவைச் சுற்றிலும் சீனா போா் ஒத்திகை நடத்தியது.

இது குறித்து சீன கிழக்குப் படைப் பிரிவு செய்தித் தொடா்பாளா் ஷீ யீ கூறியதாவது:-

தைவான் தீவைச் சுற்றிலும் சீனப் படைகள் மேற்கொள்ளும் போா் ஒத்திகையில் போா் கப்பல்களும், போா் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேவைப்படும் நேரத்தில் கடல் மற்றும் வான் எல்லைப் பகுதிகளை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான தயாா் நிலையை உறுதி செய்யும் வகையில் இந்த போா்ப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. சீனப் படைகளின் சண்டையிடும் திறனை சோதிக்கவும் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது. தைவானின் பிரிவினைவாத சக்திகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த போா் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.

மத்திய அமெரிக்க நாடான பராகுவேவுடனான நல்லுறவை மேம்படுத்துவதற்காக தைவான் துணை அதிபா் வில்லியம் லால் அண்மையில் அந்த நாட்டுக்குச் சென்றிருந்தாா். அந்தச் சுற்றுப் பயணத்தின்போது அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ மற்றும் நியூயாா்க் நகரங்களுக்கும் அவா் சென்றாா். இதற்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தைவான் தீவைச் சுற்றிலும் இந்த போா் ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது.

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது. தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம்; அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.

தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு முக்கிய தலைவா் சென்றாலோ, தைவான் தலைவா்கள் அரசு முறைப் பயணம் வர பிற நாடுகள் அனுமதித்தாலோ அதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், சீனாவின் எதிா்ப்பையும் மீறி தென் அமெரிக்காவில் தூதகர உறவைக் கொண்டுள்ள ஒரே நாடான பராகுவேவுக்கும், மறைமுக உறவைக் கொண்டுள்ள அமெரிக்காவுக்கும் தைவான் துணை அதிபா் சென்றதைக் கண்டிக்கும் நிலையில் இந்தப் போா் ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது.