ஊழலற்ற தமிழ்நாட்டை உருவாக்க தமிழக மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.
கோவை ரேஸ்கோர்சில் உள்ள தென் இந்திய நூற்பாலைகள் சங்கத்தின் 90-வது ஆண்டு விழாவையொட்டி, சங்க நிறுவனர் ஆர்.கே.சண்முகம் செட்டியின் உருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ்கோயல் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை மந்திரி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் ரவிஷாம், இந்திய தொழில்கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் மத்திய மந்திரி பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-
வளர்ச்சிப்பாதை தமிழக மக்கள் அனைவரையும் இணைக்கும் வகையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடத்தி வரும் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை தமிழக மக்களின் நெஞ்சில் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, ஒரு உலகம் ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம் என்கிற கருத்தை முன்வைத்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக சில திராவிட கட்சிகள் இந்திய மக்களை பிளவுபடுத்தும் வேலையை செய்து வருகின்றன. மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும் மக்களை பிளவுபடுத்தி வருகின்றனர். ஆனால், அண்ணாமலை நமது ஒற்றுமையை தமிழகத்தின் எல்லா பகுதிக்கும் எடுத்துச் சென்று வருகிறார்.
தமிழக மக்கள் பிரதமரோடும், அண்ணாமலையோடும் இருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். மேலும் ஊழலற்ற தமிழ்நாட்டை உருவாக்க அவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஊழல் அரசை விலக்கி இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் தமிழகம் இழந்த முன்னணி இடத்தை மீண்டும் பெற்றிடும். நான் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்து இங்குள்ள ஜவுளி தொழில் துறையினரை சந்தித்து வருகிறேன். சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா ஆகியவை பல்வேறு விலை மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நான் பெருமிதமாக கூறுகிறேன். நமது ஜவுளித்துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்தியாவை ஜவுளி துறையின் மையமாக உருவாக்கும் என உறுதியாக நம்புகிறேன். அதில் தமிழகத்திற்கு முக்கிய பங்கு இருக்கும்.
கடந்த ஆண்டு ஜவுளித்துறைக்கு மிகவும் சோதனை காலம். உக்ரைன் போர், கொரோனா அச்சுறுத்தல், உலகளாவிய பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதும் கடந்த இரண்டாண்டுகளில் இந்திய ஜவுளித்துறை ஏற்றுமதி 776 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 55 சதவீத வளர்ச்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
‘சிட்டி’ தலைவர் ராஜ்குமார் பேசும்போது, “இந்திய ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அமைச்சர் பியூஸ்கோயலின் பங்கு மகத்தானது. நள்ளிரவிலும் சிறப்பு கூட்டங்களை காணொலி வாயிலாக நடத்தி ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை கேட்டறிந்து செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஜவுளித்தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுவதில் அமைச்சரின் பங்களிப்பு மிக முக்கியமானது” என்றார்.