சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் வெற்றி!

சிங்கப்பூரின் முன்னாள் ஆளும் கட்சியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 70.4% வாக்குகளைப் பெற்று நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக தேர்தல் துறை அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் மந்திரி பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்தநிலையில், சிங்கப்பூரின் 9-வது அதிபராக தர்மன் சண்முக ரத்னம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் 70.4 % வாக்குகளைப்பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக தேர்தல் துறை அறிவித்துள்ளது. அவருக்கு அந்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சுமார் 27 லட்சம் மக்கள் வரை வாக்களித்தனர். பின்னர் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தர்மன் சண்முகரத்னம் – 70.40% (1,746,427 வாக்குகள்) பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இங் கொக் சொங் – 15.72% (390,041 வாக்குகள்), டான் கின் லியான் – 13.88% (344,292 வாக்குகள்) பெற்று தோல்வியடைந்துள்ளனர்.

அதிபர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தர்மன் சண்முகரத்னம், தமக்கும் தமது கொள்கைகளுக்கும் கிடைத்துள்ள வாக்குகள், சிங்கப்பூருக்குக் கிடைத்துள்ள “நம்பிக்கை வாக்குகள்” என்று நம்புவதாக கூறியுள்ளார். மேலும், சிங்கப்பூர் மக்கள் தம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதைக் காப்பாற்றுவேன் என உறுதியளித்துள்ளார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (வயது 66) மிகச்சிறந்த பொருளாதார வல்லுநர். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்தவர். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை ஆய்வுப் பட்டம் முடித்தார். சீன-ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் வழக்கறிஞரான ஜேன் யுமிகோ இட்டோகியை திருமணம் செய்தார். கடந்த 2001-ல் சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து முதன்முதலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, 2006, 2011, 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். நீண்டகாலமாக அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். 2011 முதல் 2014 வரை சர்வதேச நாணய மற்றும் நிதிக்குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

பிரதமரின் ஆலோசகர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், துணை பிரதமர் எனப் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர், கடந்த ஜூலை மாதம், சிங்கப்பூர் அரசாங்கப் பொறுப்புகள் அனைத்திலிருந்தும் விலகினார். இந்த அதிபர் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி இவருக்கு ஆதரவு அளித்தது. அன்னாசிப் பழம் சின்னத்தில் போட்டியிட்டு அதிபராக வெற்றி பெற்றுள்ளார் தர்மன் சண்முகரத்தினம். 2025ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக தர்மன் சண்முகரத்னத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், இதற்கு சிங்கப்பூரில் பெரும்பான்மையாக உள்ள சீனர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. தாம் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார் தர்மன். இந்நிலையில் பெரும் மக்கள் செல்வாக்குடன் அதிபர் ஆகியுள்ளார் தர்மன் சண்முகரத்னம்.