ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் ஜனாதிபதி தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்ட தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சிறப்பு அமர்வு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு மத்திய பாஜக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக கூட்டப்படுகிறது? கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. அதேவேளை, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு இந்த சிறப்பு கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு சிறப்புக்குழு அமைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது சாத்தியமா? என்பது குறித்து ஆராய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.