திமுக எம்.பிக்கள் கூட்டம் வரும் 16 ஆம் தேதி நடைபெறும்: துரைமுருகன்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், திமுக எம்.பிக்கள் கூட்டம் வரும் 16 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. 5 அமர்வுகளாக நடைபெறும் இந்தக் கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், கூட்டத்தொடரின் அஜெண்டா குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரம் தொடர்பாக மசோதா கொண்டு வரப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கேள்வி நேரமின்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புது நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவை மத்திய அரசு கொண்டு வரலாம் எனக் கூறப்படும் நிலையில், இதற்கு ‘ இந்தியா’ கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதல்வர் மு.க ஸ்டாலினும் ஒரெ நாடு ஒரே தேர்தல் மூலம் அதிபர் ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என காட்டமாக நேற்று பேசினார்.

இந்த நிலையில், வரும் 16 ஆம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக நாடாளுமன்ற உறப்பினர்கள் கூட்டம் வரும் 16 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.