ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் பங்கேற்பதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ், ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கால்ஃப், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடா, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா ட சில்வா உள்ளிட்டத் தலைவர்கள் தாங்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அதேநேரத்தில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் ஜி20 மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்றும் அவருக்குப் பதிலாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாரவ் பங்கேற்பார் என்றும் அந்நாடு அறிவித்துள்ளது. இதனிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜி20 மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக பிரதமர் லி கியாங் பங்கேற்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதற்கான அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வரும் 7-ம் தேதி இந்தியா வருகிறார். 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதனை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த ஜோ பைடன், ஆம். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார். ஜி ஜின்பிங் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளதே என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஜோ பைடன், அது எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால், நான் அவரைப் பார்க்கப் போகிறேன் என தெரிவித்துள்ளார்.