ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்க ஓபிஎஸ் சான்ஸ் கேட்டிருப்பார்: ஜெயக்குமார்

புரட்சிப் பயணத்தைத் தொடங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம் முன்னதாக ரஜினிகாந்த்தை சென்று சந்தித்தது அரசியல் அரங்கில் விவாதமான நிலையில், இந்தச் சந்திப்பு குறித்து விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று முன்தினம் நேரில் சென்று சந்தித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. எதற்காக ரஜினியை சந்தித்தார், கண்டிப்பாக அரசியல் காரணம் இல்லாமல் இருக்காது என்று பலரும் யூகங்களை எழுப்பி வருகின்றனர். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும் அரசியல் இல்லாமல் இருக்காது என்பதே பலரது கருத்து. அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் புரட்சிப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தார். நேற்று காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மழை காரணமாக தொண்டர்கள் கிளம்பியதால் இந்தப் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினி – ஓபிஎஸ் சந்திப்பு குறித்துப் பேசிய அவர், “ஓபிஎஸ் – ரஜினி சந்திப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ரஜினியின் அடுத்த படத்தில் குணச்சித்திர வேடம் கேட்பதற்காக ஓபிஎஸ் சந்தித்திருப்பார். தெருமுனை கூட்டம் கூட நடத்த வக்கில்லாத ஓபிஎஸ் எப்படி பொதுக்கூட்டத்தை நடத்துவார்?” என்று காட்டமாக விமர்சித்தார்.

மேலும் பேசிய ஜெயக்குமார், “இந்தியா முழுவதும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற கொள்கையை வரவேற்கின்றனர். கடந்த காலங்களில் 1952 தேர்தல் நடைபெற்ற போது நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்த போது சுமார் 11 கோடி மட்டுமே செலவானது. தற்போது சுமார் 60 ஆயிரம் கோடி தேர்தலுக்காக செலவாகிறது. காலத்தின் கட்டாயத்தின்படி இந்தியா முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே தேர்தல் என்பதை வரவேற்க வேண்டும். ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாமல் தவிர்க்கப்படும். ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் போது தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. தேர்தல் அடிக்கடி நடைபெறுவதால் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் அடிக்கடி ஒவ்வொரு தேர்தலுக்கும் வந்து செல்வதால் அவர்களின் நேரம் விரயமாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் என ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுவதால் அவர்களது பயண சிரமமும் குறைக்கப்படும் . 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்றத் தேர்தல் வரும்போது பெரும்பான்மையுடன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.