உதயநிதியின் பேச்சு, அவரது எண்ணத்தை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது எது என்பது குறித்து ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கக் கூடிய வகையில், தன்னுடைய தாத்தா மற்றும் தந்தையின் செல்வாக்கால் பதவி ஏற்று இருக்கிற உதயநிதி ஸ்டாலின், இன்றைக்கு நாட்டிலே வேற்றுமையை பற்றி பேசியிருக்கிற கருத்து மக்களிடத்திலே வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கூறியிருக்கிற கருத்துக்கள் ஜனநாயக அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாடு முழுவதும் விவாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒருவருக்கு ஒரு கருத்திலே, ஒரு மரபிலே ஒரு பழக்க வழக்கத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால் அதை நான் ஒழித்து கட்டுவேன் என்று ஆணவத்தோடும், அகங்காரத்தோடும் பேசுவது என்பது ஜனநாயகத்தில் ஏற்புடையதாக இருக்காது. மேலும் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிற கருத்து சொந்த கருத்தா அல்லது கட்சியின் கருத்தா என்ற விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. அனைவரும் கருத்து சொல்லலாம். ஆனால் அது மக்களுக்கு அறிவு சுடராக இருக்க வேண்டுமே தவிர பகைமை உணர்வை தூண்டுவது போல அமையக்கூடாது.
ஏதோ இந்து மதத்தை கடைபிடிப்பவர்கள் எல்லாம் சமூகநீதிக்கு எதிரானவர்கள் போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கியுள்ளார். உங்களுடைய ஒரு சொல், ஆணவத்தினுடைய அடையாளமாக இருக்கிறது. இந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தி பேசுவதில் நீங்கள் காட்டுகிற ஆர்வம் மக்கள் மத்தியிலே இன்றைக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நீங்கள் சொல்லிய அந்த சொல் உங்களுடைய தகுதி, எண்ணத்தை இன்றைக்கு உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. உங்களது பேச்சு, பகை-வெறுப்புணர்வை தூண்டுகிற வகையில் இருந்தால், அதனை ஒருபோதும் இந்த தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கு அவர் எத்தனை விளக்கம் சொன்னாலும், அவருடைய ஆழ்மனதின் இருக்கும் இந்த கொடூர சிந்தனை வெளியே வந்து உள்ளது. இது போன்று அவசர கோலத்தில் அரைவேக்காட்டுத்தனமாக நீங்கள் பேசிய பேச்சினை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.