சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதிநீர் வழக்கு 21-ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

இன்னும் 2 வாரங்கள் கழித்தே தமிழக அரசின் மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்துக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்துவிடாமல் கர்நாடகா அரசு ஏமாற்றியதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. பின்னர் இது தொடர்பாக விசாரணையை நடத்துவதற்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.பி.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. இந்த அமர்வு முன்பு கடந்த மாதம் 28-ந்தேதி தமிழக அரசின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தமிழக அரசின் சார்பில் காவிரியில் கர்நாடக அரசு 15 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. ஆனால் கர்நாடக அரசோ, எங்களிடம் அவ்வளவு தண்ணீர் இல்லை என்று வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டனர். அதே நேரத்தில் இந்த விஷயத்தில் உடனடியாக முடிவு எடுக்க நாங்கள் நிபுணர்கள் அல்ல. உரிய விசாரணை நடத்தப்பட்ட பிறகே முடிவெடுக்க முடியும் என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்திருந்தனர்.

இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசு 5 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட உத்தர விட்டது. இதை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மற்றும் காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இன்று விசாரணை நடைபெறவில்லை. தமிழக அரசின் மனு மீதான விசாரணை நீதிபதி கவாய் முன்பு இன்று வந்தபோது தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை நடத்த இயலாது என்று அவர் தெரிவித்தார். 3 நீதிபதிகளில் ஒருவர் இல்லாத நிலையில் வேறு ஒரு தேதியில்தான் விசாரிக்க முடியும் என்றும் நீதிபதி கூறினார். இதையடுத்து தமிழக அரசு சார்பில் தமிழக விவசாயிகளின் நலன் கருதி வருகிற திங்கட்கிழமையாவது மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி கவாய் அடுத்த வாரம் நான் விசாரணை நடத்தும் சூழலில் இல்லை. எனவே வருகிற 21-ந்தேதி விசாரணை நடத்தப்படும் என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தார். அதற்கு முன்பாக நீங்கள் தீர்வு காண வேண்டும் என்று எண்ணினால் சுப்ரீம் கோர்ட்டு தனி நீதிபதியை அணுகிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

கர்நாடக அரசு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிடாத நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு மீது விசாரணை நடத்தப்பட்டு காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இன்னும் 2 வாரங்கள் கழித்தே தமிழக அரசின் மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே குறுவை சாகுபடி நிவாரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.