கோயிலில் வழிபட்ட நான் கருவறைக்கு சென்று பூஜை செய்ய வேண்டும் என நினைப்பது தவறு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் எனும் பாதயாத்திரை திட்டத்தின் 2ஆம் கட்டத்தை தொடங்கியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த பயணத்தை அவர் முடிக்கிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவுக்கு பதிலடி கொடுப்பதுடன் அவர் பாஜகவின் 9ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றுள்ள அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்துகளுக்கு எல்லாம் அண்ணாமலை பதிலளித்தார். அவர் கூறியதாவது:-
கோயிலுக்கு சாமி கும்பிட செல்லும் நான் பூஜை செய்ய எதிர்பார்ப்பது தவறு. அது போல் நான் செய்யும் விவசாயத்தை பூசாரியை விட்டு செய்ய சொல்ல முடியாது. பட்டியலினத்தவர்கள், பெண்கள் சில கோயில்களில் பூசாரியாக இருப்பதை சனாதனம் ஏற்கிறது. சனாதனத்தை ஒழிப்போம் என தேர்தலில் வாக்குறுதி அளித்து தேர்தலை சந்திக்க தயாரா. ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு திமுகவினர் ஏன் வாக்களிக்கவில்லை. நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததே சனாதனம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவர் நாற்காலியில் அமர வைத்ததே சனாதனம்தான். ஜனாதிபதி தேர்தலில் திமுகவினர் வாக்களித்தது யஷ்வந்த் சின்ஹா என்ற பிராமணருக்குத்தான்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த தன்னுடைய பேச்சிலிருந்து பின் வாங்க மாட்டேன் என சொல்லி இருக்கிறார். அப்படியே இருப்பது நல்லது. அப்பொழுதுதான் ஒரு மாற்றம் வரும். சனாதனத்தை வேரறுக்க வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசின் சின்னத்தை மாற்ற வேண்டும். அப்படியானல் தமிழ்நாட்டின் சின்னமாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தை மாற்றுவாரா..?
சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்து 30 பிரசுரங்களை படித்து இருக்கிறார். இதுவும் ஒரு வகையான சனாதான தர்மம் தான்.
திமுக மற்றும் திராவிட கழகத்தினர் சனாதன தர்மம் என்றால் பிராமணர்கள்தான் என்று 1949 முதல் ஓட்டிகொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களை அரவணைத்து செல்லக்கூடியதுதான் சனாதன தர்மம். கடந்த 2022ம் ஆண்டு மேடை ஒன்றில் தான் ஒரு கிறிஸ்துவர் என்று கூறிய உதயநிதிக்கு, சனாதனம் தர்மம் குறித்து பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது.
கடந்த 1971 -ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தினுடைய கட்டாயம். நிச்சயமாக நடந்தே தீரும். உதயநிதிக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். 2024 மற்றும் 2026 தேர்தலில் சனாதன தேர்தலாக வைத்துக் கொள்ளலாமா? திமுக சனாதனத்தை ஒழிப்போம் என பிரச்சாரம் செய்யட்டும், பாஜக சனாதானத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும். மக்கள் யார் பக்கம் என்று பார்க்கலாமா?” என்று பேசினார்.