ஜி20 உச்சி மாநாடு தொடர்பான ஒரு அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என அச்சிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத் பெயர் மாற்றத்தால் பிரதமர் மோடியை பார்த்து உலகமே சிரிக்கிறது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
மத்தியில் அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சியை பிடித்து வலுவான நிலையில் உள்ள பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (I.N.D.I.A.) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணியானது இந்தியா என்ற பொருள்படும் வகையில் இருக்கிறது. இதனால் ஆரம்பத்தில் இருந்தே இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. அத்துடன் இந்தியா என்ற பெயரை படிப்படியாக தவிர்க்கத் தொடங்கினர். அந்த வகையில், ஜி20 உச்சி மாநாடு தொடர்பான ஒரு அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதில் பாரதம் என அச்சிடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்தளிக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில் அவரை குறிப்பிடும் இடத்தில், “இந்தியாவின் ஜனாதிபதி” என்பதற்கு பதிலாக “பாரத்தின் ஜனாதிபதி” என அச்சிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பவன் கேரா கூறுகையில், “பிரதமர் மோடிக்கு இப்போது இந்தியா என்ற பெயரால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றுகிறார். உலகமே அவரைப் பார்த்து சிரிக்கிறது. நீங்கள் எங்களை, எங்கள் சித்தாந்தங்களை, எங்கள் தலைவர்களை வெறுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்தியாவையும் இந்தியர்களையும் வெறுக்காதீர்கள்” என்றார்.
இதற்கிடையே நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதில் ‘பாரத்’ என மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.