கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக எனது கணவர் தனபால் பேசுவது உண்மை இல்லை என்றும், உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலின் மனைவி செந்தாமரை செல்வி தெரிவித்துள்ளார்.
தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த செந்தாமரை செல்வி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக எனது கணவர் பேட்டி கொடுப்பது எனக்கு பயமாக உள்ளது. எனக்கு அவரோடு வாழப்பிடிக்கவில்லை. ஏற்கெனவே அவரது தம்பிக்காரன் செய்த பாவத்திற்கு நான் இன்னும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். என்ன நடந்து என்றே எனக்கு இதில் தெரியாது. இதற்கே இன்னும் நான் பதில் சொல்லி வருகிறேன். அவர் என்னை கேட்டு பேட்டிக் கொடுப்பதில்லை. எனக்கு போலீசை பார்த்தாலே பயம் என்ற நிலையில் உள்ளேன். ஏன் பேட்டிக் கொடுக்கிறீர்கள் என்று கேட்டால் பிடித்து அடிக்கிறார்கள். இதனால்தான் நான் தாரமங்கலம் காவல்துறையில் புகார் அளிக்க வந்தேன். ஆனால் அவர்கள் புகாரை வாங்கவில்லை. இதனால் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தேன்.
கொடநாடு கொலை வழக்கை பொறுத்தவரை என் கணவர் பேசுவது எனக்கு தெரிந்தவரை உண்மை இல்லை; யாரோ சொல்லிக் கொடுத்து சொல்வது போல் உள்ளது. இதுவரை இதுபற்றி எந்த விஷயத்தையும் வீட்டில் பேசியது இல்லை. ஆனால் இப்போது இது பற்றி புதிதாக அவர் சொல்கிறார். இது பற்றி என்னவென்றே தெரியாமல் என்னால் என்ன சொல்ல முடியும்.
கனகராஜ் மரணத்திற்கு முன்பு 6 மாதம் வரை என் கணவருடன் பேசாமல் இருந்தார்கள். அதற்கு பிறகு என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் பேசுவது பொய் என்றுதான் நான் நினைக்கிறேன். எனது கணவரால் எனக்கு ஆபத்து உள்ளது. கொன்றுவிடுவார்களோ என்று எனக்கு பயமாக உள்ளது. எனது 2 மகள்களுக்கும் எனக்கும் பாதுகாப்பு வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேரம் பேசுவதாக உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
கொடநாடு கொலை வழக்கை பற்றி 2017ஆம் ஆண்டு முதல் எனது தம்பி விபத்தில் சிக்கியதில் இருந்து பேசிக் கொண்டு வருகிறேன். என்னை யாரோ சொல்லிக்கொடுத்து அதனை சொல்லும் அளவுக்கு நான் அறியாக் குழந்தை கிடையாது. எனக்கு 48 வயது ஆகிறது. எடப்பாடி பழனிசாமி நேற்றைக்கு காலையில் முக்கியமான புள்ளியை வைத்து அதிகாலை பேரம் பேச வந்தார். ஆனால் பேரத்திற்கு வந்தவரை நான் துரத்திவிட்டுவிட்டேன்.
கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக வரும் 14ஆம் தேதி ஆஜராக கோவையில் சொல்லி சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. அதனால் அதனை தடுப்பதற்காக என்னிடம் பேசம் பேச வந்தார்கள். ஆனால் நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக என் மனைவியை தூண்டிவிட்டு, என் மனைவிக்கு தெரியாமல் நான் பேசுவதாக சொல்கிறார்.
அத்திக்காட்டானூர் மோகன் என்பவர் அடுத்தவர் மனைவியை அழைத்துவந்து கொன்று கிணற்றி போட்டவர். அண்ணனை காண்பித்துக் கொடுக்காதே, உன்னால் எவ்வுளவு சமாளிக்க முடியும் என பேசினார். இதற்கான ஆதாரம் என்னிடம் இல்லை. நேற்றைக்கு காலை 5 மணிக்கு பேரம் பேச வந்தார்கள், அப்போது கொங்கணாபுரத்தை சேர்ந்த முக்கிய புள்ளி பேரம் பேச வந்தார். அவரிடம் பேரம் பேச வராதீர்கள் என சொல்லிவிட்டேன்.
என் மனைவியை நான் தாக்கவில்லை, எனக்கும் என் மனைவிக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. நான் பேட்டிக்கொடுப்பதால் எனது மனைவி உயிருக்கும், மகள் உயிருக்கும் ஆபத்து வரும் என்பதால் அப்படி சொல்கிறார்கள். கொனங்காபாடியின் முன்னாள் தலைவரும் எடப்பாடியின் பினாமியுமான அத்திகாட்டானூர் மோகன் தூண்டுதலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். எனக்கு திருமணம் ஆகி 23 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. பழனிசாமி சொல்லி, மோகன் தூண்டிவிட்டு எனது மனைவியை புகார் அளிக்க செய்துள்ளனர். சம்மனில் ஆஜர் ஆகாமல் தடுக்க என்ன வழியோ அதனை செய்கிறார்கள். நாட்கள் கடக்க கடக்க அனைத்தும் அழிந்து கொண்டிருக்கிறது. ஆட்களை வைத்து என்னை தாக்க வாய்ப்புள்ளது. எந்த நேரத்திலும் எனது உயிர் போகலாம்.
நானும் எனது தம்பியும் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளது. கொடநாடு கொலை வழக்கில் என்னை அடித்து துன்புறுத்தினார்கள், என்னை நிர்வாணமாக நிற்க வைக்க போலீசார் முடிவு எடுத்தார்கள். 100 கிலோ இருந்த நான் தற்போது 68 கிலோவாக இளைத்துவிட்டேன். இவ்வ்வாறு கனகராஜின் சகோதரர் தனபால் கூறி உள்ளார்.