பீக் ஹவர் மின்சார கட்டணமும், நிலை கட்டணமும் தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை நிலைகுலையச் செய்துள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளதாவது:-
மின்சார கட்டண உயர்வினால் அதிகமாக பாதிக்கப்பட்டது சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள். தொழில் நிறுவனங்கள் கட்டண உயர்வை தாங்கிக் கொண்டாலும் பீக் ஹவர் கட்டணத்தையும், நிலை கட்டணத்தையும் தாங்க முடியாத சூழல் உள்ளது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஜவுளித்துறை போன்ற பல துறை நிறுவனங்களை பீக் ஹவர் நேரங்களில் நிறுத்தி வைக்க முடியாது.
அதேபோல எந்த தொழிலும் சிறப்பாக இல்லாத சூழ்நிலையில் உற்பத்தி குறைப்பை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மாதத்தில் பாதிவேலை நாட்கள் கூட இயங்குவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. இந்த சூழலில் தொழில் நிறுவனங்கள் இயங்கினாலும் இயங்காவிட்டாலும் மாதந்தோறும் செலுத்த வேண்டிய நிலை கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். பல நிறுவனங்கள் நிலை கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தால் கடன் வாங்கியோ அல்லது நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களை விற்றோ செலுத்துகிறார்கள். மொத்தத்தில் விவரிக்க முடியாத சிரமமான சூழ்நிலையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மாற்றப்பட்ட மின்சார கட்டணங்களால் பாதிக்கப்படுகிறார்கள். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தான் அதிகமான வேலை வாய்ப்புகளை கொடுக்கிறார்கள். அதனால் வேலை இழப்புகளும் பெருகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலை தொடர்ந்தால் ஒன்று இரண்டு ஆண்டுகளில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மூடப்படும். இந்த எதார்த்த நிலைகளை கருத்தில் கொண்டு பீக் ஹவர் கட்டணம் என்ற கட்டண முறையை கைவிட வேண்டும். 5 மடங்கு ஏற்றப்பட்டிருக்கின்ற நிலை கட்டணத்தை உடனடியாக பழைய முறைக்கு மாற்ற வேண்டும். மின்சார வாரியத்தின் செயல் திறன் குறைவால் ஏற்படுகின்ற நஷ்டத்தை ஏற்கனவே சிரமப்பட்டு கொண்டிருக்கின்ற தொழில் நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க நினைக்கின்ற முறை தவறானவை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு பீக் ஹவர் மற்றும் நிலை கட்டண பாதிப்பில் இருந்து தொழில் நிறுவனங்களை அரசு காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.