சனாதனத்தை வேரறுப்போம் என பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என பாதயாத்திரையில் அண்ணாமலை பேசினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டசபை தொகுதியில் என் மண், என் மக்கள் பாதயாத்திரையை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை தொடங்கினார். கொங்கப்பட்டி பகுதியில் இருந்து வழி நெடுகிலும் மேளதாளங்கள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. உசிலம்பட்டி பஸ் நிலைய பகுதியில் உள்ள தேவர் சிலைக்கும், மூக்கையா தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேனி மெயின் ரோட்டில் உள்ள முருகன் கோவில் பகுதிக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-
தி.மு.க. ஜெயிக்காத தமிழகத்தில் இருக்கக்கூடிய தொகுதி உசிலம்பட்டிதான். இதேபோல் தெளிவாக 2024 தேர்தலிலும் மக்கள் வாக்களிக்க வேண்டும். எங்களுக்கு சனாதன தர்மம் வேண்டாம் என்று ஒரு கூட்டம் தமிழகத்தில் கிளம்பி இருக்கிறது. நீங்கள் சனாதன தர்மத்தை வேண்டாம் என்று சொன்ன கூட்டத்தை விரட்ட வேண்டும். 1974-ல் காங்கிரஸ் ஆட்சியில் இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினராக இருந்த மூக்கையாத்தேவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். கச்சத்தீவு தாரைவார்ப்புக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் தி.மு.க.வால் மறைக்கப்பட்டுவிட்டது. கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டாலும், அது தமிழகத்தின் ஒரு பகுதிதான், எப்போதும் தமிழகத்துக்குத்தான் அது சொந்தம் என்றவர் மூக்கையாத்தேவர்.
தமிழகத்தில் தற்போது அடக்குமுறை ஆட்சி நடைபெற்று வருகிறது. தி.மு.க.வினர் மக்களை சுரண்டி வாழ்ந்து வருகிறார்கள். பாடம் புகட்ட வேண்டும் தி.மு.க.வை எதிர்த்து மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். கடந்த 9 ஆண்டு கால மத்திய பா.ஜனதா ஆட்சியில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு தேவையான ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய ஆதரவை மக்கள் வழங்க வேண்டும். சனாதனத்தை வேரறுப்போம் என உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். அவருக்கு தேர்தல் மூலம் மக்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.