இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துக்கு இன்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது, படபடப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தவருக்கு போகும் வழியிலேயே நெஞ்சுவலி அதிகமாகி உள்ளது. இந்நிலையில் ஒரு வழியாக மருத்துவமனை சென்றவர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். இன்று காலை 8.30 மணி அளவில் நடந்த இந்த சம்பவம் திரையுலகில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பலரும் மாரிமுத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும் பிரபல நடிகரான மாரிமுத்து மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வநது பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர் மாரிமுத்து. ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும் சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ் பெற்றார். மேலும் பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் அவரது பேச்சுக்கள் மூட நம்பிக்கைகளுககு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும். ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆற்றலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நடிகர் மாரிமுத்து மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது திடீர் மறைவு திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவருடைய இழப்பு திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். நடிகர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.