உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என மருத்துவ மாணவர்களிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சென்னை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற 50 மருத்துவ கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மருத்துவ மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
உடல் நலத்தை பாதுகாக்க விளையாட்டில் ஈடுபடுவது எவ்வளவு முக்கியம் என்பதை மற்றவர்களை விட மருத்துவ மாணவர்களாகிய உங்களுக்கு நன்றாக தெரியும். மருத்துவ மாணவர்களும் சரி டாக்டர்களும் சரி உங்களைப் பார்க்க வருபவர்களிடம் நீங்கள் கூறும் முதல் அறிவுரை “தினசரி நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்” என்பதாக தான் இருக்கும். முன்பு எல்லாம் 50 வயதுக்கு மேல் உள்ளவங்கதான் பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் நடைபயிற்சி போவாங்க. இப்ப அந்த மாதிரி இல்லை. இளம் வயதில் இருக்கிறவங்க கூட அதிகமாக ஓட்டம்-நடை-சைக்களிங் போறாங்க. அந்த அளவுக்கு எல்லோருக்கும் உடற்பயிற்சி மீது அக்கறை வர டாக்டர்களும், மருத்துவ மாணவர்களுமே காரணம்.
விளையாட்டு போட்டிகள் மீது உங்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதே அளவுக்கு நம் முதல்-அமைச்சருக்கும் ஆர்வம் உண்டு. அதனால் தான் விளையாட்டுத்துறை மீது தனி கவனம் செலுத்தி நாம் முன் வைக்கும் அத்தனை கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றி தருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உங்கள் அனைவரிடமும் நான் ஒரு கோரிக்கையை முன் வைக்க விரும்புறேன். சமீபகாலமாக மாரடைப்பினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், 25-30 வயதுக்குள்ளவர்கள் கூட மாரடைப்பால் உயிர் இழக்கின்றனர். மருத்துவ மாணவர்கள்-பயிற்சி டாக்டர்கள்-நர்சுகள் என்ற முறையில் நீங்கள் தினமும் நூற்றுக்கணக்கான மக்களை சந்திப்பீர்கள். அவர்கள் அனைவரிடமும் உடல் நலத்தை பேணிக்காப்பதன் அவசியத்தையும், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும் நீங்கள் எடுத்து கூற வேண்டும். ஏதாவது ஒரு விளையாட்டு போட்டியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.