பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 66-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கே.ஆர்.பெரியகருப்பன், மூர்த்தி, கயல்விழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பரமக்குடியில் இருந்து சென்னை திரும்புவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரே நாடு, ஒரே தேர்தலை கருணாநிதி எப்போது ஆதரித்தார்?. ஒரே நாடு, ஒரே தேர்தலை கொண்டு வந்து என்ன சாதிக்கப்போகிறார்கள்? சமீபத்தில்தான் கர்நாடகத்தில் தேர்தல் முடிந்தது. அங்கு ஆட்சி கவிழாதா?. இது போல் வேறு இடங்களில் ஆட்சிகள் கவிழாதா?. இதுபோன்ற பல கேள்விகள் உள்ளன. 7½ லட்சம் கோடி ரூபாய் ஊழலுக்கு பதில் சொல்ல முடியாமல் தினம் தினம் ஒவ்வொரு பிரச்சினையை கிளப்பி விடுகிறார்கள். இந்தியாவையே மாற்றிக்காட்டுகிறேன் என்று மோடி சொன்னார். அது போல பெயரை மாற்றிவிட்டார். அதற்கு வாழ்த்துகள் கூறுகிறேன்.
சனாதனத்தை விட்டு விடுங்கள். அதனை 200 வருடங்களாக பேசிக்கொண்டிருக்கிறோம். கொள்கைக்காக உருவாக்கப்பட்டதுதான் தி.மு.க. ஆட்சி அதற்கு அடுத்ததுதான். அதைவிட முக்கியம், சமூக நீதி. அதுதொடர்பாக தொடர்ந்து பேசுவேன். சனாதனம் குறித்து அம்பேத்கர், அண்ணா, பெரியார், கருணாநிதி, திருமாவளவன் போன்ற யாரும் பேசாததை நான் பேசவில்லை. அவர்களைவிட குறைவாகத்தான் நான் பேசி இருக்கிறேன். நான் பேச ஆரம்பித்து இருக்கிறேன். அதனை எல்லோரும் பேச வேண்டும். அதைவிட முக்கியமாக 2024 தேர்தலில் பாசிச பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 7½ லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதற்கு அவர்கள் பதில் கூற வேண்டும். மணிப்பூரில் மிகப்பெரிய போராட்டம் நடந்து வருகிறது. 300-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. முதலில் அதை பற்றி பேசுவோம், அதன்பிறகு சனாதனத்தை பற்றி பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவருடைய மகள் சுந்தரிபிரபா ராணி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அரசியல் தலைவர்கள் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜலட்சுமி, அன்வர்ராஜா, மணிகண்டன் உள்ளிட்ட அக்கட்சியினர், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அவரது கட்சியினர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், ம.தி.மு.க. தே.மு.தி.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இமானுவேல் சேகரனின் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டி நகராட்சி இடத்தில் 3 கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.