காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது கர்நாடகாவின் முடிவு தெளிவாக தெரிந்துவிடும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இனி கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், நம் லீகல் வெப்பனை விட்டுவிடுவோம் என துரைமுருகன் கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று டெல்லியில் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அப்போது அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு, அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட வலியுறுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு வருகிற 21ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுகிறதா என பார்க்க வேண்டும். இல்லையெனில் தற்போது நிலை குறித்து இணைத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். காவிரி விவகாரத்தில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவது மட்டும்தான். உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, 21aஅம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கின் முடிவை தெரிந்து கொண்டு தேவைப்பட்டால் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டலாம். காவிரி விவகாரத்தில் ஒவ்வொரு அங்குலத்திலும் கர்நாடக அரசு எதிர்ப்பை பதிவு செய்கிறது. கர்நாடக அரசின் எதிர்ப்பை சந்தித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத் தந்து கொண்டிருக்கிறோம். எனத் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், கர்நாடகா முதல்வரிடம் பேசினால் காவிரி பிரச்சனை சுமுகமாக முடிந்துவிடும், ஆனால் முதல்வர் ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க மறுக்கிறார் எனக் கூறப்படுகிறதே எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “பேசிவிட்டால் குளோஸ் ஆகிவிடும். எங்களைக் கெடுப்பதற்கு அப்படிச் சொல்கிறார்கள். பேச்சுவார்த்தை சரி இல்லை என்றுதான் நாம் கோர்ட்டுக்கு சென்றிருக்கிறோம். மறுபடி, நாம் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றால், நமது சட்ட ஆயுதத்தை விட்டுவிடுவதாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.