போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த வீரலட்சுமியை முற்றுகையிட்ட விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் மீது வேப்பேரி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மதியம் தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி புகார் அளிக்க வந்தார். அப்போது நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக வீரலட்சுமி இருப்பதாகவும், இயக்குநர் சீமானை பொது இடங்களில் அவதூறாக பேசி வருவதாக கூறி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வீரலட்சுமியை முற்றையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் தடைசெய்யப்பட்ட பகுதியில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி முற்றுகை போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் அய்யனார், நிர்வாகிகள் சசிக்குமார், மணி உள்ளிட்டோர் மீது வேப்பேரி போலீசார் இந்திய தண்டனை சட்டம், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.