ஊழல் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இடைக்கால ஜாமீன், வழக்கமான பிணை என இரண்டு மனுக்களை நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்துள்ளார். தனது இடைக்கால ஜாமீன் மனுவில், தன் மீது சாட்டப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள சந்திரபாபு நாயுடு, தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான முதன்மையான ஆதாரங்கள் இல்லை என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சந்திரபாபுவின் வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பாராவ் கூறுகையில், “நாங்கள் இரண்டு ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்துள்ளோம். ஒன்று இடைக்கால ஜாமீன் மனு; மற்றொன்று வழக்கமான ஜாமீன் மனு. எங்களின் மனுக்களுக்கு குற்றப் புலனாய்வுத் துறை இன்னும் பதிலளிக்கவில்லை என்பதால் வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வர வாய்ப்பில்லை. குற்றப் புலனாய்வுத் துறைக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடு தரப்பில், அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கிய விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். வரும் 23-ம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, விஜயவாடாவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜமுந்திரி மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி, சிறையில் அவருக்கு ஏசி படுக்கை வசதி, தனி கழிப்பறை, நாளிதழ்கள், தொலைக்காட்சி, வீட்டு சாப்பாடு, தனி உதவியாளர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.