இந்திய மொழிகளை இந்தி ஒருங்கிணைப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தி மொழி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சிறப்பு செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-
இந்தியா, பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடாக இருந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய இந்த ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. நாட்டின் அனைத்து மொழிகளையும் வலுப்படுத்தினால் மட்டுமே வலிமையான நாடு உருவாகும். இந்தி ஒருபோதும் மற்ற இந்திய மொழிகளுடன் போட்டி போடவில்லை. இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது. இது பல்வேறு இந்திய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் மற்றும் பல உலகளாவிய மொழிகளையும் ஊக்குவித்துள்ளது. அவற்றின் சொற்களஞ்சியம், வாக்கியங்கள் மற்றும் இலக்கண விதிகளை ஏற்றுக் கொண்டு உள்ளது. விடுதலை போராட்டத்தின் கடினமான காலங்களில் நாட்டை ஒருங்கிணைக்க இந்தி மொழி மிகப்பெரிய பங்காற்றி உள்ளது. பல மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளைக் கொண்ட இந்தியாவில் ஒற்றுமை உணர்வைத் தூண்டியது. இந்தி, தகவல்தொடர்பு மொழியாக, சுதந்திரப் போராட்டத்தை கிழக்கிலிருந்து மேற்காகவும், வடக்கிலிருந்து தெற்காகவும் முன்னெடுத்துச் சென்றதில் முக்கியப் பங்காற்றியுள்ளது.
பிரதமர் மோடியின் தலைமையில் தேசிய மற்றும் உலகளாவிய மன்றங்களில் இந்திய மொழிகளுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைத்துள்ளன. நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இந்திய மொழிகளை, பொது நிர்வாகம், கல்வி மற்றும் அறிவியல் பயன்பாட்டு மொழிகளாக நிலை நிறுத்துவதற்கு உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ மொழித்துறை, தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், இந்திய மொழிகளில் அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் நலத் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அலுவலக பணிகளில் எளிமையான மற்றும் தெளிவான இந்தி வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது எனது கருத்து. ஐ.நா.வில் இந்தி பயன்பாட்டை ஊக்குவிக்க இந்தியா முயற்சிகளை எடுத்துள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.