உரிமைத் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணமாக இருந்தவர் பிரதமர் நரேந்திர மோடி தான் என்றும், முதன் முதலில் அனைத்து பெண்களுக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டுமென்று ஜன் தன் வங்கி கணக்கை தொடங்கி வைத்ததாகவும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதல்வராக கடந்த 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிருக்கு மாதம் தோறும் உதவி தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில், அண்ணா பிறந்தநாளான இன்று இந்த திட்டம் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மாதம் ரூ.1000 என பெண்களுக்கு ஒரு வருடத்துக்கு ரூ.12,000 இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கவுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அனைத்து மகளிர்க்கும் எல்லா உரிமையும், உரிமைத்தொகையும் கிடைத்தால் மகிழ்ச்சியே.. தமிழகத்தில் உரிமைத்தொகை பெறும் சகோதரிகள் மகிழ்ச்சி அடைய ஒரு சகோதரனாக தொலைநோக்குப் பார்வையுடன் அன்றே ஜன்தன் வங்கி கணக்கை தொடங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த உரிமைத் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணமாக இருந்தவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான்.. பாரதப்பிரதமர் அவர்கள் தான் முதன் முதலில் அனைத்து பெண்களுக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டுமென்று ஜன் தன் வங்கி கணக்கை தொடங்கி வைத்து அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்கள். ஜன்தன் வங்கிக் கணக்குகளின் மூலம் ஏழை,எளிய மக்களின் வங்கி கணக்குகளில் மத்திய,மாநில அரசின் மானியங்கள் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படுகிறது. பாரதப் பிரதமருக்கு நம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வோம். பாரத தேசம் முழுவதும் சுமார் 50 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 56% பெண்கள் ஜன் தன் வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளனர். கொரானா தொற்று காலத்தில் ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருந்த அனைத்து பெண்களுக்கும் மூன்று மாதம் மத்திய அரசு 500 ரூபாய் உதவித்தொகை அளித்தது. முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்று அரசு மானியங்களை பெற்ற நாம் இப்போது எந்தவித சிக்கல்களும் இல்லாமல் நேரடியாக வங்கி கணக்குகளில் பெறுவது இதுவே டிஜிட்டல் இந்தியா..! இவ்வாறு பதிவிட்டுள்ளார்.