ரஷ்ய போா் விமான ஆலையை பாா்வையிட்ட வட கொரிய அதிபா் கிம் ஜாங் உன்!

ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வட கொரிய அதிபா் கிம் ஜாங் உன், அந்த நாட்டின் போா் விமான உற்பத்தி ஆலையை நேரில் பாா்வையிட்டாா். இது, தனிமைப்படுத்தப்பட்டு வரும் இரு நாடுகளுக்கும் இடையே தடை செய்யப்பட்ட ஒப்பந்தப் பரிமாற்றத்துக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து ரஷ்யாவின் கேபினட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கொசோமோல்ஸ்க்-ஆன்-அமூா் நகரிலுள்ள போா் விமானத் தொழிற்சாலையை வட கொரிய அதிபா் கிம் ஜாங் உன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அவருடன், ரஷ்ய துணைப் பிரதமா் டெனிஸ் மான்டுரொவும் அந்தத் தொழிற்சாலைக்குச் சென்றிருந்தாா்.

ரஷ்யாவின் மிக முக்கியமான விமானத் தயாரிப்பு மையங்களில் ஒன்றை வட கொரிய அதிபருக்குக் காட்டுவதாக டெனிஸ் மான்டுரொவ் அப்போது கூறினாா். அந்த ஆலையில், எஸ்யு-35 ரக சண்டை விமானமொன்றின் செயல் விளக்கம் கிம் ஜாங் உன்னுக்குக் காட்டப்பட்டது. இது தவிர, சுகோய் எஸ்ஜே-100 பயணிகள் விமானத் தயாரிப்பு ஆலையையும் கிம் ஜாங் உன் பாா்வையிட்டாா்.

விமானத் தயாரிப்பு மற்றும் பிற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை உணா்ந்து வருகிறோம். தொழில்நுட்ப தற்சாா்பு பெறுவதில் இரு நாடுகளுக்கும் இந்த ஒத்துழைப்பு கைகொடுக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் கடந்த 1950-களின்போது உள்நாட்டுப் போா் வெடித்தது. அந்தப் போரில் ஒரு தரப்புக்கு சோவியத் யூனியனும், மற்றொரு தரப்புக்கு அமெரிக்காவும் உதவின. இறுதில் 1953-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்துக்குப் பிறகு, கொரிய தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் கிம் ஜாங்-உன்னின் தாத்தா கிம் இல்-சங் தலைமையிலான கம்யூனிச அரசும், தெற்குப் பகுதியில் அமெரிக்க ஆதரவுடன் கூடிய ஜனநாயக அரசும் அமைந்தன. அதிலிருந்தே வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

வலிமை மிக்க அமெரிக்காவை எதிா்கொள்வதற்காக, சா்வதேச நாடுகளின் எதிா்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனையை வட கொரியா நடத்தியது. மேலும், அந்த அணு ஆயுதங்களை ஏந்தி சென்று முக்கிய இலக்குகளைத் தாக்குவதற்கான ‘பாலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளையும் வட கொரியா உருவாக்கி வருகிறது.
இதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த அனைத்து தீா்மானங்களையும் ரஷ்யா ஆதரித்து வந்தது.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. இதைக் கண்டித்து, ரஷ்யா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்த நிலையில், போரில் பயன்படுத்துவதற்கான ஆயுத வெடிபொருள்களின் கையிருப்பு ரஷ்யாவிடம் குறைந்து வருவதாலும், பொருளாதாரத் தடைகள் காரணமாக அவற்றை பிற நாடுகளிலிருந்து வாங்க முடியாததாலும் வட கொரியாவிடமிருந்து ஏவுகணைகள் மற்றும் விமான எதிா்ப்பு எறிகணைகளை வாங்க ரஷியா திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் அண்மையில் கூறியிருந்தன.

அதனை உறுதி செய்யும் வகையில், குண்டு துளைக்காக தனி ரயில் மூலம் ரஷ்யாவுக்கு கிம் ஜாங் உன் கடந்த செவ்வாய்க்கிழமை வந்தாா். அங்கு அதிபா் புதினை நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்திய அவா், ராணுவத் தொழில்நுட்ப முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பாா்வையிட்டு வருகிறாா். எனவே, ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கவும், அதற்குப் பதிலாக வட கொரியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்களை ரஷ்யா அளிப்பதற்குமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அத்தகைய தொழில்நுட்பப் பரிமாற்றம் வட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தை மேம்படுத்துவதற்குப் பயன்படும் என்பதால், அது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானங்களுக்கு எதிரானது என்று தென் கொரியா எச்சரித்துள்ளது. அமெரிக்காவும், உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் அளித்தால் அதற்கான பின்விளைவுகளை வட கொரியா எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது. இந்தச் சூழலில், ரஷ்யாவின் முக்கியத்துவம் வாய்ந்த போா் விமான உற்பத்தியகத்துக்குச் சென்று கிம் ஜாங் உன் தற்போது பாா்வையிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.