சீமான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கணும்: ஜவாஹிருல்லா

சீமானின் அருவெறுக்கத்தக்க வெறுப்பு பேச்சு அவரது தரம் தாழ்ந்த மனநிலையை வெளிப்படுத்தியுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.

இது குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் முக்தார் அவர்களின் குடும்பப் பெண்கள் குறித்துத் தரக்குறைவாகப் பேசியது அதிர்ச்சியைத் தந்தது. இந்தப் போக்குக் கடும் கண்டத்திற்குரியது. சீமானின் அருவெறுக்கத்தக்க வெறுப்பு பேச்சு அவரது தரம் தாழ்ந்த மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. பெண்களின் கண்ணியத்தை மதிப்பவர் அல்ல சீமான் என்பதும் வெளிப்பட்டுள்ளது. கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை என்பதையும் அவரது வெறுப்பு பேச்சு வெளிப்படுத்தியுள்ளது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு விமர்சனங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்தில் நேர்காணல்களில் உண்மையை மக்கள் அறியும் வண்ணம் துருவித் துருவி கேள்விகள் வாயிலாக உலகறியச் செய்வது ஊடகவியலாளர்களின் தலையாயக் கடமை. அந்த வகையில் எல்லோரையும் கேள்விகளுக்கு உட்படுத்தும் ஊடகவியலாளர் முக்தார் அவர்கள் சீமான் குறித்தும் கேள்விகளை எழுப்புவது அவரது பணியின் ஒரு பகுதி. அவரது கேள்விகளுக்குப் பதில் அளிக்க இயலாமல் அவரது குடும்பப் பெண்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமாக ஊடகவியலாளர்கள் மத்தியில் சீமான் பேசி இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சித்தாந்தம் கொள்கைகளைக் கடந்து ஒவ்வொரு ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவரது குடும்ப பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்படுவது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் மறைமுகப் போராகும். சீமானின் வெறுப்பு பேச்சாக்கு எதிராக காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சீமானுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.