தமிழகத்திற்கு காவிரி நீர் தரமுடியாது என கர்நாடகா கூறுவது சட்டவிரோதம் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறினார்.
அதிமுக தற்போது முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அவர் தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதாவது கடந்த ஆண்டு அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமான நிலையில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அதற்கான பணிகளை தொடங்கி உள்ளார். அதோடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அங்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி தனது அருகே இருக்கை ஒதுக்கி அமரவைத்தார்.
ஆனால் தொடர்ந்து பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ பன்னீர் செல்வத்துக்கு அந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் ஓ பன்னீர் செல்வம் அதிருப்தியடைந்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து பாஜகவை நம்பி வருகிறார். இது ஒருபுறம் இருக்க ஓ பன்னீர் செல்வம் தரப்பு புதிய கட்சி தொடங்கும் பணியையும் முன்னெடுப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இருப்பினும் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே தான் தான் புரட்சி பயணத்தை ஓ பன்னீர் செல்வம் தொடங்க முடிவு செய்தார். ஆனால் மழை குறுக்கீட்டதால் அதுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் சேர்ந்து செயல்படுவதாக அறிவித்தார். இதில் டிடிவி தினகரன் உடன் ஓ பன்னீர் செல்வம் கைகோர்த்துள்ள நிலையில் சசிகலா இன்னும் சந்திக்கவில்லை.
இத்தகைய சூழலில் தான் நேற்று ஓ பன்னீர் செல்வம் மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் காவிரி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ பன்னீர் செல்வம், ‛‛உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு ஆகியவற்றின் படி தமிழகத்துக்கு கர்நாகா தண்ணீர் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு காவிரி நீர் தரமுடியாது என கர்நாடகா கூறுவது சட்டவிரோதம்” என்றார்.
இதையடுத்து பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛இன்னும் வரவில்லை” என தெரிவித்தார். அதேபோல், சசிகலாவை சந்திப்பது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓ பன்னீர் செல்வம், ‛‛இதுவரை பார்க்கவில்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் எனவும், புரட்சி பயணம் மீண்டும் தொடங்கும்” என்றார்.