பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதே நமது கடமை: உதயநிதி

பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதே நமது கடமை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

மதுரை பாண்டி கோவில் அருகே துவாரகா பேலஸ் மண்டபத்தில் தமிழக அரசின் கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு அதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு திட்ட இயக்குனர் தரேஸ் அகமது முன்னிலை வகித்தார். கலெக்டர் சங்கீதா வரவேற்றார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வங்கி அட்டையை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

முதலமைச்சர் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று மதுரையில் 500-க்கும் மேற்பட்ட மகளிருக்கு உரிமை தொகை பெறுவதற்கான டெபிட் கார்டுகளை வழங்கி உள்ளேன். இது வெறும் டெபிட் கார்டு அல்ல பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு ஆகும். இன்று இந்தியா முழுவதும் இந்தத் திட்டத்தை பின்பற்றி வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்தில் பெரியார் கண்ட கனவுகளுக்கு நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் தான் செயல் வடிவம் கொடுத்து வருகிறது. டாக்டர் கலைஞர் அதை செய்தார். அதனைத்தொடர்ந்து நம்முடைய முதல்வரும் பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். எனவே தான் இந்த அரசை அனைவரும் பாராட்டும்படி திராவிட மாடல் அரசு என்று நாம் கூறுகிறோம்.

பெண்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக மூன்று நிலைகள் இருக்கிறது என்று பெரியார் ஆழ்ந்து சிந்தித்து சொன்னார். ஒன்று கலாச்சார ரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு சட்டரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று பொருளாதார ரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று தடைகளையும் நீக்கினால் தான் பெண்கள் சுதந்திரமாக முன்னேற முடியும் என பெரியார் சொல்லி இருக்கிறார். பெண்கள் முன்னேற மேல் ஜாதி, கீழ் ஜாதி என்ற பாகுபாடும், முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடும் உள்ளது. விதவை என்று சொல்லி பெண்களை செயல்படாமல் வைத்திருப்பது போன்ற பாகுபாடுகள் எல்லாம் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. இதனை நீக்குகின்ற வகையில் அண்ணா விதவை மறுமணம் திட்டம், சுயமரியாதை திருமண திட்டத்தை தொடங்கி வைத்தார். பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காக டாக்டர் கலைஞர் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும் சொத்தில் பெண்களுக்கு பங்கு இல்லை என்ற நிலையை போக்க சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற சட்டத்தை நிறைவேற்றினார்.

தற்போது தமிழக முதல்வர் பெண்கள் அனைத்திலும் முன்னேற வேண்டும் என்பதற்காக அதுவும், பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக பெண் குழந்தையாக இருக்கும்போது தந்தையையே நம்பி இருக்கிறார். வளர்ந்து பெரிய பெண்ணான பின்னர் திருமணம் முடித்த பின்னர் கணவனை நம்பி இருக்கிறார். பின்னர் வயதானவுடன் மகனோ அல்லது மகளையோ நம்பி இருக்கிறார். எனவே இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பொருளாதார ரீதியாக பெண்கள் முன்னேற வேண்டும் என்று கருதி முதல்வர் பதவியை ஏற்றவுடன் முதல் கையெழுத்தாக கட்டணமில்லா பேருந்தில் மகளிர் செல்வதற்காக கையெழுத்து இட்டார். அதனைத் தொடர்ந்து புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுகின்ற திட்டத்தினை கொடுத்தார். மேலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் காலையில் உணவு சாப்பிட முடியாத நிலையில் அனுப்புகிறோமே என்று தாயின் கவலையை போக்குகின்ற வகையில் இன்று 31,000 பள்ளிக்கூடங்களில் 17 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்ற வகையில் காலை உணவு திட்டத்தினை நம்முடைய முதல்வர் தொடங்கி வைத்திருக்கிறார். தற்போது இந்த பெண்கள் உரிமை தொகை என்பது உதவித் தொகை அல்ல என்று நம்முடைய முதல்வர் கூறி பெண்களின் முன்னேற்றத்திற்காக மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் பெறுகின்ற வகையில் இந்த உரிமை தொகை திட்டத்தினை செயல்படுத்தி இருக்கிறார். சுயமாக சிந்திக்க வேண்டும், சுத்தமாக சிந்திக்க வேண்டும். அப்போதுதான் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு பணம் கிடைத்தால் அந்த பணத்தை குடும்பத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும், நாட்டுக்காகவும் செலவு செய்வார்கள். எனவே பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதே நமது கடமை. இவ்வாறு அவர் பேசினார்.