நாம் தமிழர் கட்சியில் தம்மை எதிரியாக சிலர் பேசி பிரச்சனை வந்தது என நிகழ்ச்சி ஒன்றில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி சீமான் வெளிப்படையாக தெரிவித்தார்.
சென்னையில் மூத்த வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் படத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீமான் மனைவி கயல்விழி சீமான் பேசியதாவது:
என்னை சீமான் முதன் முதலாக சந்தித்த பின் எல்லோரு அப்பா, அம்மாகிட்ட சொல்லுவங்க.. ஆனால் தடா சந்திரசேகரிடம்தான் சொன்னார். அதன்பின்னர் தடா சந்திரசேகரன் என்னை மறைமுகமாக பொண்ணு பார்த்தார். எனக்கே தெரியாது. அப்ப இருந்து எனக்கு ரொம்ப நெருக்கமா இருந்தார். எங்க திருமணம் நடக்கனும்னு என்பதில் ரொம்ப உறுதியாக இருந்தார். எங்களுக்குள் (எனக்கும் சீமானுக்கும்) ஆரம்ப காலத்துல சில பிரச்சனைகள், சின்ன சின்ன சண்டைகள் வரும்போது எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு வெச்சு பேசும் போது, சீமானிடம். “தம்பி.. இப்ப வேற.. இது குடும்பமாகிருச்சு.. இதை எல்லாம் மாத்திகிடனும்னு” நிறைய சொல்வார். ஆனால் எங்கிட்ட எப்பவும் சொல்ற வார்த்தை “தம்பி நல்லவன்மா! அவன் சரியா பண்ணுவான்மா.. என் தம்பி நல்லவன்மா”.. இந்த வார்த்தையை மாமா இப்ப வரைக்கும் என்கிட்ட சொல்லி இருக்கிறார்.
சமீப காலத்துல சில பிரச்சனைகள் வரும் போது.. நம்ம கட்சிக்குள்ளேயே சிலர் என்னை எதிரியாக பேசி பிரச்சனைகள் வரும்போது, அப்ப தடா சந்திரசேகரன் என்கிட்ட நேரில் பேசலை.. ஆனால் எனக்கு தெரியும், அவரு ஆறுதலாக இருப்பார் என.. அன்றைக்கு தடா சந்திரசேகர் மனைவி சொல்லி அழுதுகிட்டு இருந்தாங்க.. மருமகளுக்கு நான் எப்பவும் இருப்பேன் என தடா சந்திரசேகர் சொல்லி இருக்கிறார்.. அந்த சமயத்தில் என்கிட்ட ஒருதடவை அலைபேசியில் பேசினாரு.. அப்ப தெரிஞ்சது.. தடா சந்திரசேகரன் என் பக்கம் இருக்கிறார் என்பது. அப்பவும் என் கிட்ட கடைசியாக சொன்ன வார்த்தை “தம்பி ரொம்ப நல்லவன்மா.. அவன் எல்லாத்தையும் சரியா பண்ணுவான் என்பதுதான். ஆரம்பத்தில்தான் தடா சந்திரசேகரனிடம் பிரச்சனைகளை சொன்னேன். அதன்பின்னர் நானே “அவரு நல்லவரு.. சரியா பண்ணுவாரு” என சொல்லிக் கொள்வேன். இந்த குடும்பம் நீங்க உருவாக்கிக் கொடுத்தது.. நன்றி.
மாமா உங்கள ரொம்ப தவற விடுறோம். தனிப்பட்ட முறையில் நான் தவற விடுறேன்.. (குரல் தழுதழுக்கிறது) நன்றி என கூறினார். அப்போது மனைவியின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சை கேட்டு சீமான் கண் கலங்கியவாறு உட்கார்ந்திருந்தார். அதேபோல, மற்ற தொண்டர்களும், நிர்வாகிகளும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக காணப்பட்டனர்.
பின்னர் சீமான் பேசியதாவது:-
இப்ப சொல்லலாம்.. ஒன்றும் பிரச்சனை இல்லை.. தம்பி சேரா, அண்ணன் தமிழ்ச் செல்வன் (மறைந்த விடுதலைப் புலிகளின் தளபதிகள்) குடும்பம்.. பல குடும்பங்களை நாங்கள் இங்கே எங்கள் மூத்தவர் (தடா சந்திரசேகரன்) கண்ணுக்கு கண்ணாக வைத்து, பாதுகாத்து நாங்கள் பத்திரமாக வேறு நாடுகளுக்கு அனுப்பி பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். அத்தனை பணியையும் செய்தது மூத்தவர் தடா சந்திரசேகரன். சும்மா பேச்சு மட்டுமல்ல்..நாங்க பேசிட்டு அப்படியே போற கூட்டம் கிடையாது. இன்றைக்கும் என் மனைவி, அந்த இயக்க குடும்பங்களுக்கு பணம் அனுப்புவது, படிப்பு செலவுக்கு காசு அனுப்புவது.. தவம் தவம்னு பேரு சொன்னாங்க.. அந்த நாட்டுல (இலங்கை ஈழத்தில்) நாங்க நிக்கும் போது தவா அண்ணா, தவா அண்ணான்னு வாக்கியில அந்த சப்தம் கேட்காமல் இருக்கவே இருக்காது. அந்த தவா அண்ணன் குடும்பம் எங்க இருக்குன்னு யாருக்கும் தெரியாது. அந்த தவா அண்ணன் குடும்பத்தை கொண்டு வந்து பாதுகாத்து..
நான் நிக்கும் போது (இலங்கை ஈழத்தில்) எனக்கு பயிற்சி கொடுத்து என்னோடு பாதுகாவலராக இருந்த புகழ்மாறன், அண்ணன் தவா. இருவரும் என்னை படுக்க வைக்க வைத்துவிட்டுப் போய் 5 நிமிசம் கூட இல்லை. அதிகபட்சம் 10 நிமிசம்.. சேரா எல்லோரும் போய்ட்டு கதறி அழுதுட்டு ஓடி வந்து என்னை கட்டிப்பிடிச்சு அழுகிறாங்க.. என்னனு கேட்டா போற வழியில் செல்லடிச்சுருச்சு.. அந்த வெடிகணை அடிச்சு இறந்துட்டாங்க.. அந்த தவா குடும்பம் எங்க இருக்குன்னு யாருக்கும் தெரியாது. அதை வைத்து பாதுகாத்து எங்கள் மகள் சீனாவில் போய் மருத்துவம் படிக்க பணம் கொடுத்து உதவியது என் மனைவிதான். அவர்கள் திருப்பி வெளிநாட்டுக்குப் போறதுக்கு உதவுனதும் என் மனைவிதான்.
உங்களால் நம்ப முடிகிறதா பாருங்க? என் அண்ணன் தமிழ்ச்செல்வன் (தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்) மனைவி, எங்க அண்ணன் பிள்ளைக.. பேரு பின்னாடி பிரச்சனையில் மாறி இருக்கு. எங்க மூத்தவர் (தடா சந்திரசேகரன்) வீட்டுல அண்ணி இருக்காங்க.. போய் பார்த்துட்டு திரும்புறோம்.. ஒரு உறையில் வைத்து ரூ10,000 கொடுக்க காசில்லை.. கொடுத்துட்டு திரும்பி வந்து காரில் வரும் போது கயல் அழுகுது.. அக்கா (தடா சந்திரசேகர் மனைவி) வேணாம்னு சொல்லிடுவாங்கன்னு நினைச்சேன்.. ஆனால் நம்ம கிட்ட இருந்தது இவ்வளவுதான்.. கொடுத்தோம். ஆனா அவங்க வாங்கிகிட்டாங்கன்னா அவங்களுக்கு எவ்வளவு தேவை இருக்கும். அதுக்கு மேல நம்மளால கொடுக்க முடியலையேன்னு அழுதாங்க.. அந்த அளவுக்கு வலியை தாங்கிக் கொண்டு துன்ப துயரங்களை சுமந்து கொண்டிருக்கிற தமிழ்ச் சமூகத்தின் பிள்ளைகள் நாங்கள். இவ்வாறு சீமான் கூறினார்.