ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை: ராகுல் காந்தி

ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை, ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாததால் இந்த மசோதாவே முழுமையற்றதாக உள்ளது என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த மசோதா தொடர்பாக ராகுல் காந்தி பேசியதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்தது முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பெண்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறது. பெண்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில் மிக முக்கிய பங்காற்றியது பஞ்சாயத்து ராஜ். பஞ்சாயத்துகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுத்தது காங்கிரஸ் கட்சி. இது மற்றொரு மைல்கல். மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு நாட்டின் பெண்களுக்கு உதவும் முக்கியமான முடிவு என்பதை எல்லோரும் ஏற்கிறார்கள். இந்த மசோதாவில் ஓ.பி.சி ஒதுக்கீட்டையும் இணைக்க வேண்டும்.

இந்த மசோதாவில் இரு முரண்பட்ட விஷயங்களை பார்க்கிறேன். ஒன்று மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது, மற்றொன்று தொகுதி வரையறை தேவை என்பது. ஓபிசி பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாததால் முழுமையற்ற மசோதாவாக இது உள்ளது. ஓபிசி பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. புதிய நாடாளுமன்றம் மிகவும் அருமையாக உள்ளது, ஆனால், நாடாளுமன்றத்தில் நாட்டின் முதல் குடிமகளான பழங்குடி இன பெண் ஜனாதிபதியை பார்க்க முடியவில்லை.

என்னுடைய பார்வையில் இன்றே இதை நடைமுறைப்படுத்தலாம். அதானி உட்பட பிற பிரச்சனைகளில் இருந்து எப்படி மக்களவை திசைதிருப்புவது என்பதை பாஜகவினர் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். இதை மேலும் காலதாமதப்படுத்துவதற்காக கொண்டுவரவில்லை என்று நான் நம்புகிறேன். அதனால் இதை உடனடியாக நிறைவேற்றி, நடைமுறைக்கு கொண்டுவாருங்கள்.

மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதிகள் மறுசீரமைப்பு செய்தபிறகே இது நடைமுறைக்கு வரும் என்பது ஏற்கத்தக்கது அல்ல. அதேபோல் நாட்டு மக்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது அனைவருக்கும் அதிகாரம் அளிப்பதாக இருக்க வேண்டும்.

மத்திய அரசின் நிர்வாகத்தில் 90 செயலாளர்கள் உள்ளனர், அதில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். ஓபிசி இடஒதுக்கீட்டின் படி நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதித்துறைகளில் கடைபிடிக்க முடிகிறதா? மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதானியின் முறைகேடுகளை மறைக்க பாஜக வெவ்வேறு உத்திகளை கையாள்கிறது. ஒரு சில நபர்களின் கட்டுப்பாட்டில் நாடு உள்ளது” என்றார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பிக்கள் முழுக்கம் எழுப்பினர். ஓபிசி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்ற ராகுலின் குற்றச்சாட்டை தொடர்ந்து பாஜக எம்.பிக்கள் கூச்சலிட்டனர். அதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்களும் கூச்சல் போட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.