காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது, அதனால்தான் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை கர்நாடக அரசு முறையாக திறந்து விடாத நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. காவிரி விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துப் பேசிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். அப்போது துரைமுருகன் கூறியதாவது:-
காவிரியில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை ஆராய்ந்து கூறுவதற்கு காவிரி ஒழுங்காற்று குழுவிற்கே அதிகாரம் உள்ளது. கடந்த 13ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தின் நபர்கள் ஆய்வு செய்து விட்டு 12,500 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு தரலாம் என்று கூறினார்கள். அதன் பிறகு அடுத்த ஓரிரு நாட்களிலேயே 5000 கன அடி கொடுக்கலாம் என்று கூறுகிறார்கள். காவிரி ஒழுங்காற்று குழு இரண்டு பேருக்கும் சமமாக செயல்படுகிறதா அல்லது கர்நாடகத்திற்கு ஆதரவுக்காக செயல்படுகிறதா என மத்திய அமைச்சரிடம் கேட்டுள்ளேன். மத்திய அரசு இதுகுறித்து விளக்கவில்லை என்றால் மத்திய அரசு எதற்கு, காவிரி ஒழுங்காற்று குழு எதற்கு?
முதலில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது அதன் பிறகு மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. காவிரி ஒழுங்காற்று குழு ஒருதலைபட்சமாக கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அதனால் தான் நீதிமன்றம் சென்றுள்ளோம். வழக்கறிஞர் நாளை(இன்று) நீதிமன்றத்தில் முறையிடுவதாக தெரிவித்துள்ளார். இதுவரையில் கர்நாடகா தமிழ்நாட்டின் கோரிக்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொண்டது இல்லை. எல்லா விஷயங்களுக்கும் முடியாது என்று தான் கூறியுள்ளார்கள். ஒவ்வொன்றிற்கும் போராடி தான் நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
காவிரியின் நீண்ட வரலாற்றில் ஆரம்பம் முதல் நான் இருக்கிறேன். எதையும் ஒரு நாள் கூட ஒரு துரும்பு கூட நாம் கேட்டதற்கு அவர்கள் இதுவரை அசைந்து கொடுத்ததில்லை. நாம் பெற்றிருக்கும் உரிமை அனைத்தும் உச்ச நீதிமன்றம் கொடுத்த உரிமை தான். அதேபோல் கர்நாடகாவிலிருந்து காவிரி நீரையும் நாம் பெற்று விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.