ஆர்எஸ் பாரதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சவுக்கு சங்கர் அவசர வழக்கு!

உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை விமர்சித்ததன் மூலம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி நீதித்துறையின் நம்பகத்தன்மையை சேதப்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டி உள்ள சவுக்கு சங்கர், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, “அதிமுக ஆட்சிக்காலத்தில், சத்தியதேவ் என்ற நீதிபதி அரசுக்கு எதிர்ப்பான சில தீர்ப்புகள் வழங்கினார் என்பதற்காக அவரது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படிருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஏ.ஆர்.ஸக்ஷ்மனனின் மருமகன் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டிருந்தது. அதேபோல், நான் தொடர்ந்த டான்சி வழக்கை விசாரித்த நீதிபதி சிவப்பா, ஜெயலலிதாவின் மனுவை ஏற்காமல் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டதால், 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபின்னர், அவர் பந்தாடப்பட்டார். அவர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு போனார் என்பது வரலாறு. ஆனால், திமுக அப்போதே நீதிபதிகளுக்கு எதிரான சம்பவங்களை எல்லாம் கடுமையாக கண்டித்திருந்தது. இதுபோன்ற நடவடிக்கைகளில் அறவே நம்பிக்கை இல்லாத இயக்கம் திமுக. எனவே, நீதிமன்றத்தின் மீது மிகுந்த நம்பிக்கையோடு இருக்கின்ற நாங்கள், கேட்டுக் கொள்வது, ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திமுக சார்பில் நான் தொடர்ந்த வழக்கு எடப்பாடி பழனிசாமி டெண்டரில் ரூ.3600 கோடிக்கு ஊழலும், முறைகேடுகளும் நடந்துள்ளன என்று 2018-ல் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு மீண்டும் இதே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தபோது, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று சொல்லி தீர்ப்பளித்தார். கடந்த 18.07.2023 அன்று இதே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ரூ.3600 கோடி அளவுக்கு ஊழல் நடந்த வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்ட ஒன்றில், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிற வேலை. நீதிமன்றத்தை அரசியலுக்கான விளையாட்டு மைதானமாக மாற்றாதீர்கள் என்று தெரிவித்தார். ஆனால், இரண்டு வாரங்கள் கழித்து அதே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வெறும் 44 லட்சம் ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மீது வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை செலவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல பொன்முடி வழக்கில், அவர் மீது எந்த குற்றமும் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது. ஓரிரு நாட்கள் இல்லை, பல ஆண்டுகளாக நடந்தது. விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதிகள்தான் அதற்கான உத்தரவை பிறப்பித்தனர். அதையெல்லாம் கேலி செய்யும் வகையில், கிண்டல் செய்யும் வகையில், இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்குகளில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளை எல்லாம் மனதிலே கொள்ளாமல், வழக்கு விசாரணை நடத்தி, விடுவிக்கப்பட்ட ஒருவரை, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

அதேபோல தங்கம் தென்னரசு ஏறத்தாழ 74 லட்சம் ரூபாய், 74 லட்சம் ரூபாய் என்றால், நங்கநல்லூரில் 600 சதுரஅடி நிலம் வாங்கலாம். கேகேஎஸ்எஸ்ஆர் ஒரு 400 சதுரஅடி வாங்கலாம். இவர்கள் இருவர் மீதும் சென்னை உயர் நீதிமன்றம் தனது பொன்னான நேரத்தை செலவழித்து விசாரிக்கும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார். இதை நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் எடுத்து கூறுவோம். அதுமட்டுமல்ல, ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, அதிமுக அமைச்சர்களாக இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்களோ, அதே முகாந்திரத்தின் அடிப்படையில்தான் இவர்களும் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால், இன்றைக்கும் ஓபிஎஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதன் எம்எம்லஏவாகத்தான் உள்ளனர். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்ற நீதிபதியான அவர், குறிப்பிட்டு தேர்ந்தெடுத்து திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் குறித்த வழக்குகளை மட்டும் எடுத்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது என்றால், இதுபோல விசாரித்த நீதிமன்றத்துக்கும், நீதிபதிக்கும் இருக்கிறது. ஆனால், பாகுபாடு பார்த்து விசாரணைக்கு எடுக்கக்கூடாது என்பதுதான் விதி. எனவே, இதை உச்ச நீதிமன்றத்தில் இதையெல்லாம் ஒரு கோரிக்கையாக வைத்து வாதிடுவோம். நீதிமன்றத்தின் மீது திமுகவுக்கு நம்பிக்கை இருக்கிறது. சட்ட ரீதியாக வழக்குகளை எதிர்கொள்வோம்” என்று அவர் கூறினார்.

இதனிடையே வளர்மதி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்தார். மேலும் தலைமை நீதிபதி ஒப்புதல் உடன் இந்த வழக்கை தொடர்ந்திருப்பதால், இந்த வழக்கில் விலக முடியாது என்றும் நானே விசாரிப்பேன் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியிருந்தார்.

இதனிடையே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் முடிவினை விமர்சித்த, திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் ஜி.கார்த்தி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் , முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தானாக முன்வந்து வழக்க தொடர்ந்தார். அவரது இந்த துணிச்சலான முடிவைப் பாராட்ட வேண்டும். ஆனால். ஆர்எஸ் பாரதி, ஆகஸ்ட் 24, 2023 அன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நீதிபதி தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பதில் ‘தேர்வு செய்து செயல்படுவதாக கூறியுள்ளார். நீதிபதிக்கு தவறான நோக்கம் உள்ளது போல் பேசி உள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியின் இந்த கருத்து பொதுமக்களின் பார்வையில் நீதித்துறையின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தி உள்ளது. எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோரது அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் பி.விஜேந்திரன், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரினர். அப்போது நீதிபதிகள், பதிவாளரிடம் (நீதித்துறை) எழுத்துப்பூர்வ கோரிக்கையை அளிக்குமாறு உத்தரவிட்டார். உரிய ஆவணங்களுடன் எழுத்து பூர்வமாக வழக்கு தாக்கல் செய்தால், வழக்கு ஒரு வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் கூறினர்.