சந்திரயான் 3 வெற்றிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை கூறிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன், எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை தனியாருக்கு கொடுத்ததை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. 312 நாட்களாக நிலவை 3,400 சுற்றுகளை சுற்றிய பின்னர்தான் இதை சந்திரயான் 1 உறுதி செய்தது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ. ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த வெற்றியையடுத்து பல்வேறு தரப்பினரும் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும், எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை தனியாருக்கு கொடுத்ததை கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் ஆற்றிய உரையில் கூறியதாவது:-
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை தீர்மானித்து நிலவின் வழித்தடத்தை துல்லியமாக கணித்து இறங்கியது தொழில்நுட்ப துறையில் நம்முடைய பாய்ச்சல் வேகம் முன்னேற்றத்தினுடைய ஒரு சான்று. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இந்த அவையில் காலையில் இருந்து நடந்தது விஞ்ஞானத்தைப் பற்றிய விவாதமா அல்லது வேத புராணங்களை பற்றியதா? அமைச்சர் புராண இதிகாச கதைகளை நீண்ட நேரம் பேசினார். அதை கேட்பதற்கு நாடாளுமன்றத்திற்கு வரவேண்டியதில்லை. ஒரு கோவில் மடத்திலே அமர்ந்தால் நல்ல கதாகாலட்சேபத்தை கேட்டிருக்க முடியும்.
விக்ரம்லேண்டர் நிலவில் இறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என்று பெயர் வைத்த நமது பிரதமர், எஸ்.எஸ்.எல்.வி.யை தனியாருக்கு கொடுக்கிற இந்த மிஷனுக்கு ‘அதானி சக்தி’ என்று பெயர் வைப்பாரா. இவ்வாறு அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
எஸ்எஸ்எல்வி என்பது சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ வடிவமைத்த அதிநவீன ராக்கெட்டாகும். இது, 10 முதல் 500 கி.கி எடைகொண்ட சிறிய ரக செயற்கைக்கோளை பூமியிலிருந்து 500 கி.மீ தொலைவில் நிலை நிறுத்தும் திறன் கொண்டதாகும். இந்நிலையில் இந்த ராக்கெட்டுகளை தயாரித்து, விண்ணில் செலுத்த தனியார் துறையுடன் இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. தற்போது வரை 15 எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ ஆர்டர் கொடுத்திருக்கிறது. இப்படி எஸ்எஸ்எல்வி ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவதன் மூலம் புதுமை மற்றும் செயல்திறனை மேம்படுத்த முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இப்படி இருக்கையில்தான் சு.வெங்கடேசன் எம்பி நாடாளுமன்றத்தில் இதற்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.