நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடக்க வேண்டும். ஆனால் ஒரு நாளுக்கு முன்பாகவே தேதி குறிப்பிடாமல் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதன் பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் திடீரென மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை அறிவித்தது. செப்டம்பர் 18 ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடக்கும் என கூறப்பட்டது. இதையடுத்து திட்டமிட்டப்படி கடந்த 18 ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடங்கியது. பழைய நாடாளுமன்ற கட்டத்தில் லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்கள் கூடினர். 75 ஆண்டு கால பழைய நாடாளுமன்ற கட்டம் குறித்து அவர்கள் தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதன்பிறகு கடந்த 19 ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 20ம் தேதி விவாதம் நடத்தப்பட்டது. அப்போது தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பாக இந்த மசோதாவை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறினர்.
இதையடுத்து லோக்சபாவில் மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 454 எம்பிக்களும், எதிராக 2 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. இதையடுத்து நேற்று ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்தை தொடர்ந்து ராஜ்யசபாவிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக மொத்தம் 214 பேர் வாக்களித்தனர். எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை. இதன்மூலம் கடந்த 27 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது இரு சபைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் அது ஜனாதிபதி திரெளபதி முர்வுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளிக்கும் நிலையில் சட்டமாக்கப்படும். அதன்பிறகு மசோதாவில் உள்ள ஷரத்துகள் அடிப்படையில் அந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.
இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தில் கடைசி நாள் கூட்டம் இன்று நடக்க வேண்டும். இன்று காலை 11 மணிக்கு லோக்சபா, ராஜ்யசா ஆகிவை காலை 11 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் ஒரு நாளுக்கு முன்பாகவே நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் முடித்து கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி நேற்றே நாடாளுமன்ற இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தான் ஒரு நாளுக்கு முன்பாகவே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முடித்து கொள்ளப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை மத்திய அரசு மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் மற்றும் புதிய நாடாளுமன்றத்தில் கூட்டத்தை தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டியதாகவும், இவை இரண்டும் நிறைவேறியுள்ளதால் ஒரு நாளுக்கு முன்பாகவே நாடாளுமன்ற இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.