2024 தேர்தலில் பாஜக ஒட்டு மொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘ஸ்பீக்கிங் பார் இந்தியா’ இரண்டாவது ஆடியோ உரை வெளியானது.

“ஸ்பீக்கிங் பார் இந்தியா” என்ற தலைப்பில் ஆடியோ பதிவு மூலம் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாடி வருகிறார். அண்மையில் அவரது முதல் பாட்காஸ்ட் உரை வெளியான நிலையில், இன்று 2-வது பாட்காஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த பாட்காஸ்ட்டில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-

இந்தியா கூட்டணியைப் பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என்று குற்றம் சாட்டுகிற மோடி அவர்களே! உங்கள் ஆட்சியைப் பற்றி சி.ஏ.ஜி அறிக்கை என்ன சொல்லியிருக்கிறது என்று படித்துப் பார்த்தீர்களா? இதைப் பற்றி சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதித்தீர்களா? இல்லை பதில் சொன்னீர்களா? அயோத்தியா திட்டத்தில்கூட ஊழல் செய்த கட்சிதான் பா.ஜ.க என்று சி.ஏ.ஜி அறிக்கை சொல்லியிருக்கிறது. எல்லாத் திட்டங்களுக்கும், நம்முடைய வாய்க்குள் நுழையாத பெயராகப் பார்த்து வைப்பார்கள். அப்படி வைத்தால்தான் அதில் என்ன நடக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதாவது ராமாயணம் நடந்த இடங்களுக்கு எல்லாம் பயணிகளை அழைத்துச் செல்லும் சுற்றுலாத் திட்டம் அயோத்தியா திட்டம். இதை உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், கோவா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களில் செயல்படுத்தப் போவதாக சொன்னார்கள்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தியதில், பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி குற்றம் சாட்டி இருக்கிறது. ஒப்பந்தம் வழங்கியதில் எத்தகைய விதிமீறல்கள் இருக்கிறது என்று இந்த அறிக்கை சொல்லியிருக்கிறது. அடுத்து, பா.ஜ.க அறிவித்ததை நிறைவேற்றாது என்பதற்கு சி.ஏ.ஜி. அறிக்கை ஒரு எடுத்துக்காட்டை சொல்லியிருக்கிறது. அதுதான் உதான் திட்டம். மிகப்பெரிய பீடிகையோடு இந்தத் திட்டத்தை தொடங்கினார்கள். ஏழைகள் விமானத்தில் பயணிக்கலாம், நடுத்தர நகரங்களிலும் விமான நிலையம் அமைக்கப்போகிறோம் என்று சொல்லி 2016-ஆம் ஆண்டு தொடங்கிய திட்டம் இது. உதான் திட்டத்துக்காக மத்திய அரசு 1,089 கோடி ரூபாயை ஒதுக்கியது. திட்டமிடப்பட்ட 774 வழித்தடங்களில் விமான சேவை வழங்க முடிவு செய்ததில் 7 விழுக்காடு தடங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகிறது. 93 விழுக்காடு தடங்களில் விமானங்கள் இயக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் சேலம், தஞ்சாவூர், இராமநாதபுரம், வேலூர் நகரங்களுக்கு உதான் திட்டத்தில் விமான சேவை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், திட்டமிடப்பட்ட இந்த 4 நகரங்களில் சேலத்துக்கு மட்டும்தான் உதான் திட்டத்தில் விமானம் இயக்கப்பட்டது. அதுவும் இப்போது இல்லை. மொத்தமாக அறிவிக்கப்பட்ட 774 வழித்தடங்களில் 720 வழித்தடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை என்று சி.ஏ.ஜி அறிக்கை சொல்லியிருக்கிறது.

அடுத்து, நாம் அடிக்கடி சொல்கிற, விளம்பரங்களால் பொய் பிம்பத்தை கட்டமைத்திருக்கும் பா.ஜ.க அரசு என்று; அந்த விளம்பரங்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? மத்திய அரசின் பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களில் 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட நிதி, மத்திய அரசின் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்பட்டு முறைகேடு நடந்திருக்கிறது என்று அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முறைகேடுகளுக்கெல்லாம் உச்சம் டோல் பிளாசா முறைகேடுதான். பயணம் செய்யும் பொதுமக்களிடம் டோல் பிளாசா மூலமாக, நாள்தோறும் மாபெரும் மோசடியான வசூல் நடந்திருக்கிறது. 5 டோல் பிளாசாக்களை மட்டும் தணிக்கை செய்ததில், விதிகளுக்குப் புறம்பாக, வாகன ஓட்டிகளிடம் இருந்து 132 கோடியே 5 லட்சம் ரூபாயை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசூலித்து இருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கை குற்றம் சாட்டியிருக்கிறது. அவ்வாறு பார்த்தால் இந்தியா முழுவதும் எத்தனை டோல் பிளாசா இருக்கிறது. அதன் மூலமாக எத்தனை லட்சம் கோடி ரூபாய் முறைகேடாக வசூலாகி இருக்கும் என்று கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள். அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.