அதிமுக-பாஜக கூட்டணி முறிவு இறுதியானதாக இருக்காது: டாக்டர் கிருஷ்ணசாமி!

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு இறுதியானதாக இருக்காது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைமுகமாக பேசிய கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கள் ஏற்கெனவே இருந்த சலசலப்புகளை பஞ்சாயத்துக்களாக வெடிக்கச் செய்தது. அதிமுகவின் தலைவர்கள் அண்ணாமலை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினர். குறிப்பாக கடந்த 14ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்த பின்னர் அண்ணாமலை மீதான விமர்சனங்கள் கூர்மையடைந்தன. ஏற்கெனவே அண்ணாமலை மீது பாஜக தலைமையிடம் அதிமுக ஏராளமான புகார்களை அளித்திருந்தது. இப்படி இருக்கையில், அண்ணா குறித்து அவர் பேசியதற்கு கூட பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது. எனவேதான் அண்ணாமலை மீதான் விமர்சனங்கள் சூடுபிடித்தது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன. இதனையடுத்து இது குறித்து விரிவாக பேட்டியளித்த ஜெயக்குமார், “எங்களை பொறுத்த அளவில் கட்சியின் மறைந்த தலைவர்கள், மூத்த தலைவர்கள் குறித்த அவதூறாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இது கட்சி முடிவு. கட்சி முடிவைதான் நான் அறிவிக்கிறேன்” என்று கூறினார்.

அதேபோல பாஜக மாநில தலைவரை மாற்றம் செய்தால் இந்த கூட்டணி இறுதியாகும்? நாடாளுமன்ற தேர்தலுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? என்று நிரூபர் எழுப்பிய கேள்விக்கு, “மறைந்த தலைவர்கள் குறித்து விமர்சிப்பதை தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை. இப்படியான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடு கூட்டணி தேவையா? என்று தொண்டர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். எனவே இந்த கூட்டணி தேவையில்லை என்பதுதான். தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்” என்று கூறியிருந்தார். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக எதையும் கூறாத நிலையில், ஜெயக்குமார் கூறுவதை பெரியதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று பாஜக நிர்வாகிகள் கூறி வந்தனர்.

இந்த சூழலில்தான் இன்று அவசரமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் பல்வேறு மாவட்ட செயலாளர்களும் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து 2 கோடிக்கும் அதிகமான தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, “இந்த கூட்டணி முடிவு முறிவு இறுதியானதாக இருக்காது” என்று கூறியுள்ளார். அவர் மேலும் தொடர்ந்து கூறுகையில், “இது வருத்தமளிக்கக்கூடிய செய்தியாக பார்க்கிறேன். இது துர்திஷ்டமான நிகழ்வு. தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழலில், அதிமுக, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து 40க்கு 40 தொகுதிகளில் வெற்றியடைய உள்ள சூழலில், அதிமுக இந்த கூட்டணியிலிருந்து விலகியுள்ளதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏற்கெனவே இந்த விரிசலை சரி செய்ய ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் முயல வேண்டும் என்று பாஜக தலைவர்களுக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். இந்த விவகாரத்தை பொறுத்த அளவில், இது முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. எதுவும் நடக்கலாம். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால் பாஜக தேசிய தலைமை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வந்து இந்த பிரச்னையை சரி செய்ய வேண்டும். நாங்கள் இரு கட்சிகளுடனும் நட்புடன்தான் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.